திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்

திரைப்பட இயக்குநர் மகேந்திரன் இன்று (ஏப்.2 ) காலமானார். அவருக்கு வயது 79. சிவாஜி முதல் இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை படங்களை இயக்கியும், நடித்தும் வந்தவர் மகேந்திரன். அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எம்.ஜி.ஆர்., மூலமாக சினிமா துறைக்குள் வந்தவர் மகேந்திரன். திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக திரைப்பயணத்தை தொடங்கி, முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர். விஜய்யின் தெறி, ரஜினியின் பேட்ட, நிமிர், மிஸ்டர் சந்திரமவுலி, சீதக்காதி, பூமராங் என பல படங்களில் நடித்துள்ளார்.

சிறுநீரக கோளாறு காரணமாக சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மகேந்திரன் இன்று காலமானார் என்பதை அவரது மகன் ஜான்மகேந்திரன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மகேந்திரனின் உடல், சென்னை, பள்ளிக்கரனையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மகேந்திரனுக்கு ஜான் மகேந்திரன் என்ற மகனும், டிம்பிள் அலெக்ஸ் என்ற மகளும் உள்ளனர். ஜான் மகேந்திரனும் இயக்குநர் தான், விஜய் நடித்த சச்சின் உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ளார்.

மகேந்திரனின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பல திரைப்பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபலங்கள் அஞ்சலிக்கு பின்னர், மகேந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடலுக்கு ரஜினி, பாரதிராரஜா, இளையராஜா உள்ளிட்ட திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் இ.பி.எஸ்., திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பலர் மகேந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.