திருச்செந்தூர் கோயில் பிரகார மண்டபம் இடிந்து பெண் பலி: நடை அடைப்பு

திருச்செந்தூர் வள்ளிக் குகை அருகில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார்.

முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் உள்ள பிராகார மண்டபம், திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். இன்னும் எத்தனை பேர் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி கோயிலின் நடை சார்த்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோயில், திருச்செந்தூர். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் பிரசித்தி பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்று. முருகன் கோயிலுக்கு அருகில் வள்ளிக்குகை உள்ளது. இதனை புராணத் தொடர்பு கொண்ட குகை என்பார்கள்.

இந்த வள்ளி குகைக்கு அருகில், பிரகாரத்தை வலம் வரும் மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்துக் கொண்டிருந்த வேளையில், மண்டபம் இடிந்து விழ… பக்தர்கள் பலரும் அலறியடித்து ஓடினார்கள்.

கோயில் அதிகாரிகளும் ஊழியர்களும் சம்பவம் குறித்து அறிந்ததும் மண்டபம் பகுதிக்கு வந்தார்கள். இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த அசம்பாவிதத்தால், பெண் ஒருவர் பலியாகி உள்ளார். இன்னும் பலர் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் கூட்டமும் தற்போது பல கோயில்களைத் தரிசிக்கும் காலம் என்பதால், காலை முதலே கோயிலில் கூட்டம் நிரம்பி வழிந்ததாகச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், திருச்செந்தூர் சென்று இடிந்த மண்டபப் பகுதியைப் பார்வையிடுவார் என்று தெரிகிறது.

பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோயிலில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது பக்தர்களுக்கும் பொதுமக்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தத் துயர வேளையில், திருச்செந்தூர் வள்ளி குகை அருகில் பிராகார மண்டபம் இடிந்து விழுந்தது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு உடனடியாக கட்டிடப் பாதுகாப்புக் குழு போல் ஏதேனும் ஆய்வுக் குழுவை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், ஆலயங்கள், மருத்துவமனைக் கட்டிடங்கள் முதலானவற்றை ஆய்வு செய்து, சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.