திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு, செல்லும் இடங்களில் எல்லாம், எதிர்ப்பு வலுத்து வருகிறது

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை, பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு, செல்லும் இடங்களில் எல்லாம், எதிர்ப்பு வலுத்து வருகிறது. இச்சூழலில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வீரமணி, ஊர் ஊராக பிரசாரம் செய்து வருகிறார். இதனால், தங்கள் கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகளும் விழாமல் போகும் ஆபத்து உள்ளதாக, தி.மு.க.,வினர் புலம்பி வருகின்றனர்.

அவர்கள் கூறியதாவது: எங்கள் கட்சி பெயரில், ‘திராவிடம்’ இருந்தாலும், நாங்களும் கடவுள் பக்தி கொண்டவர்கள் தான். மறைந்த கருணாநிதியே, வயதான காலத்திற்கு பின், ‘சென்டிமென்டாக’ மஞ்சள் துண்டை அணிந்து இருந்தார். தற்போதைய தலைவர் ஸ்டாலின், சோளிங்கர் பொதுக்கூட்டத்தில், ‘நாங்கள் ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. என் மனைவி தினமும் கோவிலுக்கு செல்வார்; நான் தடுப்பதில்லை’ என பேசினார்.

அதே சமயம், ‘ஓசி பிரியாணி’ என, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மகன், தயாநிதியால் வர்ணிக்கப்பட்ட, திராவிடர் கழக தலைவர் வீரமணி, அழையா விருந்தாளியாக, பிரசாரத்திற்கு வருகிறார். இதை எங்கள் கட்சியினரே, விரும்பவில்லை.

சமீபத்தில், விருதுநகர் தொகுதிக்குட்பட்ட, மதுரை, திருமங்கலத்தில், அவர் பிரசாரம் செய்த போது, நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. இவ்வளவு ஏன், வேட்பாளரான, காங்., கட்சியின் மாணிக்கம் தாகூர் கூட வரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். திராவிடர் கழகம் என்ற பெயரில், ஹிந்துக்களின் சம்பிரதாயம், புனிதம், வழிபாடு போன்றவை குறித்து, ‘பப்ளிசிட்டி’க்காக பேசி, ‘கலகம்’ செய்து வரும் வீரமணியுடன், நாங்கள் பங்கேற்றால், ஹிந்துக்களின் ஓட்டுகள் எங்களுக்கு கிடைக்காது என்பது நிதர்சனம்.

‘பிரசார கூட்டத்திற்கு வீரமணி வராமல் இருந்தாலே போதும். அவர் வந்து பேசி, கிடைக்கக்கூடிய ஓட்டுகளையும் கெடுத்து விட வேண்டாம்’ என, நிர்வாகிகள் மூலம், தலைமைக்கு தகவல் அனுப்ப உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.