திமுக வேட்பாளர் பட்டியல்: கொளத்தூரில் ஸ்டாலின்- சேப்பாக்கத்தில் உதயநிதி

சென்னை: 173 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். இதில், கொளத்தூரில் 3வது முறையாக ஸ்டாலினும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதியும் போட்டியிடுகின்றனர். இன்று வெளியான பட்டியலில் திமுக முன்னாள் அமைச்சர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் சில தொகுதிகளில் ஏற்கனவே போட்டியிட்ட நபர்களே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., மட்டும், 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும், கூட்டணி கட்சிகளையும் சேர்த்தால், 187 தொகுதிகளில், தி.மு.க.,களமிறங்குகிறது. தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சி களுக்கான தொகுதி எண்ணிக்கை முடிவாகி உள்ளது. 234 தொகுதிகளில், 47 தொகுதிகளில், தனி சின்னத்தில், கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. மீதமுள்ள, 187ல், தி.மு.க., மற்றும் ம.தி.மு.க., உள்ளிட்ட இதர கட்சிகளும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.
பட்டியலை வெளியிட்டு ஸ்டாலின் கூறுகையில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பது அரசியல் கூட்டணி அல்ல. தேர்தல் கால கூட்டணி அல்ல. இது கொள்கை கூட்டணி. திமுக வேட்டாளர்கள் 173 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். 61 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மதிமுக, பார்வர்டு பிளாக், ஆதி தமிழர் உள்ளிட்ட கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. அனைவரும் வெற்றி பெறுவார்கள். இதில் சந்தேகம் இல்லை. கூட்டணி கட்சியினரும் வெற்றி பெறுவார்கள். திமுக ஆட்சிஎன்ற ஒற்றை நோக்கத்துடன் இருக்க வேண்டும். தமிழகத்திற்கு, எதிர்காலத்திற்கு உங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என பத்திரிகையாளர்களை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்