திமுக கட்சி நாளிதழான முரசொலி செயல்படும் இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்

திமுக கட்சி நாளிதழான முரசொலி செயல்படும் இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 44,551 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாங்குநேரி தொகுதியில் அதிமுக.,வின் நாராயணன் 32,333 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது: இடைத்தேர்தலில் மக்கள் அமோக வெற்றியை கொடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலினும், அவரின் கூட்டணி கட்சியினரும் பொய்யான வாக்குறுதிகளை அளித்ததை மக்கள் இப்போது உணர்ந்துள்ளனர். அதனால், இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியினர் வெற்றி பெற்ற தொகுதியில் கூட அதிமுக.,வுக்கு மக்கள் வெற்றியை அளித்துள்ளனர். எனவே, இது உண்மைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம்.

இந்த வெற்றிக்கு காரணமான துணை முதல்வர், அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர், தொண்டர்கள், வாக்களர்களுக்கு நன்றி. உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். முரசொலி பத்திரிகை அலுவலகம், பஞ்சமி நிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.