திமுக ஆட்சி என்றால் அராஜக ஆட்சி – முதல்வர் பழனிசாமி

திமுக ஆட்சி என்றால் அராஜக ஆட்சி என மதுரையில் நடந்த பிரசாரத்தின் போது முதல்வர் பழனிசாமி கூறினார்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. ஏழை, எளிய மக்கள் மீது அக்கறை கொண்டது அ.தி.மு.க., ஆட்சி. மதுரைகிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் அராஜகமானவர். அதிமுக வேட்பாளர் அமைதியானவர். பண்பானவர். தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது நீர் நிலைகள் நிரம்பி காட்சி அளிக்கின்றன. திமுக ஆட்சி என்றாலே அராஜக ஆட்சி தான். அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து தான் நடக்கும். தி.மு.க., ஆட்சியில் நிலங்கள் அபகரிக்கப்பட்டது.

மேலூரில் முதல்வர் பிரசாரத்தின் போது, விவசாயிகள் மத்தியில் அதிமுகவின் மதிப்பு உயர்ந்து வருகிறது. கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி தி.மு.க.,. திமுக., கட்சி அல்ல. கார்பரேட் கம்பெனி. அக்கட்சி ஆட்சிக்கு வந்தால், உங்கள் சொத்து உங்களிடம் இருக்காது. போலீஸ் உயர் அதிகாரிகளை தி.மு.க.,வினர் மிரட்டுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

அலங்காநல்லூரில் அவர் பேசியதாவது: விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்து, பார்த்து பார்த்து திட்டங்களை அதிமுக அரசு அளித்து வருகிறது. 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.