தினகரன் ஜாமீன் மனு விசாரணை 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று (திங்கள்கிழமை) நடைபெறவிருந்த நிலையில் தினகரனின் வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லியில் ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த மாதம் 16-ம் தேதி கைது செய்தனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து பறிமுதல் செய்தனர். சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் கடந்த 25-ம் தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
லஞ்சப் பணத்தை பரிமாற்றம் செய்ய ஹவாலா தரகராக செயல்பட்ட நரேஷ் என்பவரையும் கடந்த 28-ம் தேதி டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இருவரின் போலீஸ் காவல் முடிந்த நிலையில் டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் டிடிவி தினகரன், மல்லிகார்ஜுனா ஆஜர்படுததப்பட்டனர். அப்போது இருவரையும் இன்று (15-ம் தேதி) வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இருவரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மே 15-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்கள் காவல் மே 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அவர்களது காவல் வரும் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
தினகரன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறவிருந்த நிலையில் தினகரன் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று விசாரணை 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், சுகேஷ் சந்திரசேகர் ஜாமீன் மனுவை நிராகரித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.