தினகரனுக்கு வாழ்த்து சொன்னதாக போலி ட்விட்டர் பதிவு: அமைச்சர் உதயகுமார் காவல் ஆணையரிடம் புகார்

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு நான் வாழ்த்து சொல்வது போல் ட்விட்டரில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சசிகலாவின் தீவிர ஆதரவாளர். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது ஜெ.பேரவை பொதுச்செயலாளராக இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் முதல்வர் ஆனார். அப்போது ஜெ.பேரவை சார்பில் சசிகலா முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அதை ஜெயலலிதா சமாதியில் வைத்து பேட்டியும் அளித்தார்.

பின்னர் ஓபிஎஸ் பிரிந்தபோது அவரை கடுமையாக விமர்சனம் செய்தார். மீண்டும் ஓபிஎஸ் இணைந்தபோது அவரை மாதிரி விசுவாசம் மிக்கவர்கள் யாரும் இல்லை என்று பேட்டி அளித்தார். இந்நிலையில் ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வென்றதும் அதிமுகவில் சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ், சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தார்கள்.

தங்களுக்கு அதிமுகவிலிருந்து சில அமைச்சர்கள், 50 எம்.எல்.ஏக்கள் வரை வாழ்த்துச்சொன்னதாக தங்கத்தமிழ்ச்செல்வன் பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து சொன்னது போல் போலி ட்விட்டர் அக்கவுண்ட்டில் வெளியாகி இருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பலரும் ஆர்.பி. உதயகுமாரிடம் கேட்க அது தனது ட்விட்டர் பக்கம் அல்ல என்றும், நான் வாழ்த்தும் சொல்லவில்லை என்றும் மறுத்துள்ளார். ஏற்கெனவே தினகரன் வேட்பு மனுத்தாக்கல் படத்தை தன் பெயரில் போலி ட்விட்டர் அக்கவுண்டில் வெளியிட்டது பற்றி காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்த அமைச்சர் உதயகுமார், தற்போது வெளியான வாழ்த்துச்செய்தியை குறிப்பிட்டு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்து அதை தனது ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார்.

இந்த புகார் சைபர் கிரைம் போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.