தினகரனுக்கு ஆதரவு இறுதிவரை தொடருமா? – மேலூர் கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் பேட்டி

அதிமுக (அம்மா அணி) துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து, மேலூர் கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவு இறுதிவரை தொடருமா என்பது குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர்.

மேலூரில் ஆக. 14-ல் டி.டி.வி.தினகரன் பங்கேற்ற கூட்டத்தில் 20 எம்எல்ஏ.க்கள் பங்கேற்றனர். இதில் தேனி-3 எம்எல்ஏக்கள், திண்டுக்கல்-1 எம்எல்ஏ, சிவகங்கை-1 எம்எல்ஏ, ராமநாதபுரம்-1 எம்எல்ஏ, விருதுநகர்-2 எம்எல்ஏக்கள் என 5 மாவட்டங்களில் மட்டும் 8 எம்எல்ஏ.க்கள் அடக்கம்.

எஸ்டிகே. ஜக்கையன்

5 தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இவர்களின் ஆதரவு எப்போதும் தினகரன் பக்கம் உறுதிபட இருந்தால், அவர் எதிர்ப்பு நிலை எடுத்தால் தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்படும். இதுபோன்ற அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால், தங்களின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து, சில எம்எல்ஏக்கள் தெரிவித்த விவரம்:

எஸ்டிகே. ஜக்கையன் கூறுகையில், ‘ஆட்சியை கவிழ்க்க துணைபோக மாட்டேன். ஆட்சி நீடிக்கவே ஒத்துழைப்பேன். அதிமுக 3 அணிகளாக அல்ல, ஒரே அணியாகத்தான் இருக்கும். சசிகலா, டிடிவி, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தற்போது வகிக்கும் பொறுப்பிலேயே நீடிப்பர்’ என்றார்.

நிலக்கோட்டை எம்எல்ஏ தங்கதுரை கூறுகையில், ‘ஆட்சி கவிழ்ப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என டி.டி.வி.தினகரன், சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஆகியோர் உறுதிப்பட தெரிவித்துள்ளனர். தினகரனின் அடுத்த கூட்டத்துக்கு மேலும் 10 எம்எல்ஏ.க்கள் வருவார்கள்.

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வரலாம். எங்கள் தரப்பில் கொண்டுவர வாய்ப்பே இல்லை. இதனால் ஆட்சி கவிழ்ப்பு நடக்கவே நடக்காது.’ என்றார்.

எம்எல்ஏ தங்கதுரை

திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா கூறுகையில்,‘ டி.டி.வி.தினகரன் பங்கேற்ற மேலூர் கூட்டம் சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து தினகரன் கூடவே இருப்பேனா, எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பேனா என்பது குறித்து நேரில் பார்க்கும்போது தெரிவிக்கிறேன்.’ என்றார்.

ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்கமிழ்ச்செல்வன் கூறுகையில், ‘தினகரன்தான் அதிமுக துணை பொதுச் செயலாளர். அவர் எது செய்தாலும் கட்சியின் நலனுக்காக மட்டுமே இருக்கும். கட்சியில் அனைத்து அதிகாரமும் பெற்றுள்ள அவரது பின்னால் எந்த நிலையிலும் நிற்போம்’ என்றார்.

மானாமதுரை மாரியப்பன் கென்னடி கூறுகையில், ‘எந்த சூழ்நிலையிலும் டி.டி.வி.தினகரனுடன்தான் இருப்பேன். ஆட்சியைக் கலைக்க தினகரன் அனுமதிக்க மாட்டார்.

கட்சியா, ஆட்சியா என பார்த்தால் கட்சிதான் முக்கியம். டிடிவி உத்தரவில்லாமல் எடப்பாடியுடன் பழனிசாமியுடன் செல்ல மாட்டேன். ஆட்சியை கலைக்க யார் முயன்றாலும் தினகரன் தடுத்து விடுவார்.’ என்றார்.

பரமக்குடி முத்தையா: முதல்வர் பழனிசாமியும் அதிமுகவில்தான் உள்ளார். ஆகையால் அவரது ஆட்சியை கவிழ்க்க மாட்டோம். சாத்தூர் எம்எல்ஏ சுப்பிரமணியனை தொடர்பு கொள்ள முயன்றபோது போனை எடுக்கவில்லை.