திட்டமிட்டபடி 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை; வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை- தேர்தல் கமிஷன்

அன்றைய தினம் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தலைமை தேர்தல் கமிஷன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல்களை தேர்தல் கமிஷன் நடத்தி முடித்துள்ளது.

8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்ட மேற்கு வங்காளத்தில் 7 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. 8-வது இறுதிகட்ட தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.ஒரு மினி பொதுத்தேர்தல் போன்று அமைந்து விட்ட இந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை வரும் 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. வழக்கமாக வாக்கு எண்ணிக்கையின் போக்கைக்கண்டு, வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை வந்து விட்டாலே அரசியல் கட்சித்தொண்டர்கள் கட்சி அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் கூடி
பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், ஆடிப்பாடியும் வெற்றி கொண்டாட்டங்களை தொடங்கி விடுவார்கள். வெற்றி பெற்ற பின்னரோ கொண்டாட்டங்களுக்கு கேட்கவே வேண்டாம்.ஆனால் இம்முறை இந்த வெற்றி கொண்டாட்டங்களுக்கு, ஊர்வலங்களுக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றும், அதையொட்டி போடப்பட்டுள்ள ஊரடங்குகள், கட்டுப்பாடுகள் பெரும் தடையாக அமைந்துவிட்டன.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு, ஊர்வலங்களுக்கு தேர்தல் கமிஷன் அதிரடியாக தடை விதித்துள்ளது. இதையொட்டி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு ஒரு கடிதம் எழுதி உள்ளது.அதில், “நாடெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, வாக்கு எண்ணிக்கையின்போது இன்னும் கடுமையான ஏற்பாடுகளை செய்வதற்கு தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கையைத் தொடர்ந்து வெற்றி ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது” என கூறப்பட்டுள்ளது.மேலும், வெற்றி பெற்ற வேட்பாளர் அல்லது அவரது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் இருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற வரும்போது அவருடன் 2 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது எனவும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

5 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தேர்தல் கமிஷன் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தவில்லை என்று சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் கண்டனம் தெரிவித்தது. அதுட்டுமின்றி, நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை தாக்குதலுக்கு தேர்தல் கமிஷன் மட்டுமே பொறுப்பு எனவும் கூறியது.தேர்தல் கமிஷன் மிகுந்த பொறுப்பற்ற ஒரு அமைப்பு என்றும் சாடியது. இன்னும் ஒரு படி மேலே போய், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் மீது கொலைக்குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம் எனவும் கருத்து
தெரிவித்தது. அத்துடன் மே 2-ந்தேதி நடைபெறக்கூடிய வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கூட தயங்க மாட்டோம் என நீதிபதிகள் எச்சரித்தனர்.வாக்கு எண்ணிக்கை நாளில் பின்பற்ற உள்ள கொரோனா கால கட்டுப்பாட்டு விதிமுறைகள் தொடர்பாக 30-ந்தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறும் தேர்தல் கமிஷனுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.இந்த நிலையில்தான் வாக்கு எண்ணிக்கை நாளில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு, ஊர்வலங்களுக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்து பிறப்பித்த உத்தரவை பா.ஜ.க. வரவேற்றுள்ளது.இதையொட்டி அந்தக் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “தேர்தல் வெற்றி கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை தடை செய்யும் தேர்தல் கமிஷன் முடிவை நான் வரவேற்கிறேன். இந்த முடிவை கண்டிப்புடன் கடைப்பிடிக்குமாறு மாநில பா.ஜ.க. பிரிவுகளை நான் அறிவுறுத்தி இருக்கிறேன்” என கூறி உள்ளார்.