தாய் மொழியாம் தமிழுக்கு தனியிடம் கொடுத்து வருமானத்தின் ஒரு பகுதியை வாரி வழங்கும் கனடிய வர்த்தக வெற்றியாளர் TEKNO MEDIA மதன்

ஈழத்தமிழர்கள் தமிழ் மொழியையும் தங்கள் தேசத்தையும் நன்கு நேசித்தவர்கள். கல்வியிலும் கலைகளிலும் உயர்ந்த பயிற்சியையும் உன்னதமான ஆற்றலையும் கொண்டு வாழ்வில் உயர்ந்தவர்கள். வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் நாட்டை விட்டு ஓடி விடவேண்டும் என்ற சிந்தனையும் எம்மவர்களுக்கு இல்லாமல் இருந்த காலத்தில், உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற சில தமிழர்கள் அங்கு உயர் பதவிகளைப் பெற்று தமிழர்களினதும் தமிழ் மொழியினதும் அடையாளத்தை பதித்த வரலாறு அறுபது வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமானது.
ஆனால் இலங்கையில், போரும் போராட்டமும், தமி;ழ் இளைஞர்களின் எழுச்சியும் ஆரம்பமான பின்னர் அங்கு கல்வியும் கலைகளும் வர்த்தகமும் விவசாயமும் தொழில்நுட்பமும் தமிழர்களுக்கு கைகொடுக்க மறுத்தன. கற்றும் உழைத்தும் கரைகண்ட மேற்படி துறைகளில் அவர்களுக்கு வெற்றிகளை அடையும் சந்தர்ப்பங்கள் குறைந்தன. அவர்களின் இருப்பு என்பது கேள்விக்குரியாக மாறிய போது, இறப்புக்கள் மாத்திரம் அதிகரித்துச் செல்வதை அவர்கள் உணரத் தொடங்கினார். தங்களுக்கு என்ற ஒரு நாடு உருவாகும் என்ற நம்பிக்கை பெருமளவில் இருந்தாலும், உயிர்கள் பறிக்கப்படும் போது, சாதாரண தமிழர்கள் தங்கள் உயிர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும, தம் உறவுகளைக் காப்பாற்றிக் கொள்ளவும் வெளிநாடுகளை நோக்கிப் “பறக்கத்” தொடங்கினார்கள்.
இவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்ற எம்மவர்களில் பலர் இன்று ஒவ்வொரு துறையிலும் வெற்றியாளர்களாக பிரகாசிக்கின்றார்கள். தாங்கள் வாழும் நாடுகளில் கல்வி, தொழில்நுட்பம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் பேராசிரியர்களாகவும் பெரும் வல்லுனர்களாகவும் சிறப்பாகப் பணியாற்றி, தமிழ் மொழியினதும் தமிழர்களினதும் அடையாளத்தை உச்சத்தில் பொறிப்பதற்கு காரணகர்த்தாக்களாக விளங்குகின்றார்கள்.

அந்த சிறப்புக்களுக்கு உரிய ஒரு சிலரில் கனாடவில் பிரம்டன் மாநகரில் வாழ்ந்து வருகின்ற இளைய தலைமுறை வர்த்தக முன்னோடி மதன் சண்முகராஜா அவர்களின் சிறப்புக்களையும் தமிழ் மொழிக்கு அவர் தரும் மரியாதையையும், கல்விக்காக அவர் அர்ப்பணிக்கும் பெருந்தொகை பணம் தொடர்பாகவும் இவ்வார கதிரோட்டத்தில் நாம் பதிவு செய்வதை நாம் எமது பொறுப்பான கடமை என்று கருதுகின்றோம்.
கனடாவில் TEKNO MEDIA என்னும் நிறுவனத்தை கடந்த பதின்மூன்று வருடங்களாக வெற்றிகரமாக நடத்திவருகின்றார். தமிழ் மொழி தமிழ் இனம் ஆகிய இரண்டு துறைகள் தொடர்பான செயற்பாடுகளிலும் அவற்றின் முன்னேற்றத்திலும் அதிக அக்கறை கொண்ட மதன் சண்முகராஜா தமது நிறுவனத்தின் உற்பத்தி உபகரணங்களில் ஒன்றான பாதுகாப்பு கெமராக்களில் அவற்றின் இயக்கும் மொழியாக முதலில் தமிழ் மொழியை புகுத்தி சாதனை புரிந்ததோடு மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் பல அறிஞர்களாலும் பெரியோர்களாலும் பாராட்டப் பெற்றவர். இந்த செயற்பாட்டின் மூலம் வெளிநாடுகளிலும் செம்மொழியாம் எம் தமிழ் மொழி, ஒரு அறிவியல் துறை சார்ந்த மொழியாக திகழவேண்டும் என்ற தனது கனவை அவர் நனவாக்கியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டை நடத்துவதற்கான அனுசரணையாளராக 25000 கனடிய டாலர்களை வழங்கியுள்ளார். மேலும் இம்மாதம் கனடாவின் பிரம்டன் மாநகரில் அங்கு இயங்கும் தமிழ்ச் சங்கம் நடத்தும் மாபெரும் “தமிழீழச் சாவடி” மூன்று நாள் விழாவிற்கு ஐயாயிரம் டாலர்களை வழங்கியுள்ளார். மேலும் நேற்றைய தினம் அவரது தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விருதுகள் மற்றம் பரிசளிப்பு வைபவத்தில் பல கலைஞர்கள் ஊடகவியலாளர்கள்,வானொலிக் கலைஞர்கள் வர்த்தக வெற்றியாளர்கள் என பல தமிழ் அன்பர்களுக்கு பணப்பரிவு மற்றும் விருதுகளை வழங்கிக் கௌரவித்துள்ளார். அவருக்கு எமது கனடா உதயன் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதேவேளை திரு மதன் அவர்கள் தேகாரோக்கியம் சிறப்புறப் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.