தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் எம்.பி.

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ‘தாமிரபரணி ஆறு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி’ நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நெல்லையை அடைந்தது. நேற்று காலை நெல்லையில் இருந்து தொடங்கிய பேரணி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வந்தது.

அங்கு பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மாநில தலைவர் ஜி.கே.மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் தாமிரபரணியை பாதுகாக்குமாறு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். ஸ்ரீவைகுண்டம் அணையை அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வட தமிழகத்தில் இருந்து வந்துள்ள நான் இங்கு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுவது அரசியலுக்காக அல்ல. தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. பாலாறு, தென்பெண்ணை, காவிரி, வைகை ஆறுகள் அனைத்தும் வற்றி போய்விட்டன. தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. அவற்றில் 2 டி.எம்.சி. தண்ணீரை அணை கட்டி சேமித்தால் கூட 5 மாவட்ட குடிநீர் தேவையை நம்மால் பூர்த்தி செய்ய முடியும். பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

தாமிரபரணி ஆற்றில் இதுவரை 3 பெரிய அணைகள், 8 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. பெரிய அணைகள் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் அணை ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. 7 தடுப்பணைகள் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டன. ஆனால் கடந்த 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சி காலத்தில் ஒரு தடுப்பணை கூட கட்டப்படவில்லை. நீர் மேலாண்மை குறித்த சிந்தனை அற்றவர்களாகவே உள்ளனர்.

மக்கள் குடிநீர் பிரச்சினையில் தத்தளிக்க நம் அரசு குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க அனுமதிக்கிறது. அந்நிறுவனங்கள் கழிவுகள் கலக்கும் இடமாக தாமிரபரணியை மாற்றிவிட்டனர். நெல்லை மாநகராட்சியில் பாதாள சாக்கடை இல்லாததால் திடக்கழிவுகளும் தாமிரபரணியில் தான் கலக்கிறது. அதோடு நிறுத்தாமல் தூத்துக்குடியில் உள்ள நிறுவனங்களின் கழிவுகளும் தாமிரபரணியிலேயே கலக்கிறது.

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை 8 அடி கொள்ளளவு கொண்டது. ஆனால் அரசுகளின் கவனக்குறைவால் 1 அடி மட்டுமே கொள்ளளவு கொண்ட அணையாக மாறிவிட்டது. ராமதாஸ், ஆர்.நல்லகண்ணு ஆகியோரின் முயற்சியால் இந்த அணையை தூர்வார கோர்ட்டு மூலம் அனுமதி பெறப்பட்டது. தூர்வார அனுமதி கொடுத்தால் திராவிட ஆட்சியாளர்கள் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.

கருமேனி ஆறு, நம்பியாறு, தாமிரபரணி ஆறுகளை இணைக்கும் போது வறட்சி பாதித்த பகுதிகளும் பாசன வசதி பெறும். ஆனால் அதனை இந்த அரசு செய்யாமல் தாமிரபரணி ஆற்றுப்படுகையிலே தொழிற்சாலைகள், காகித ஆலைகள், நூற்பாலைகள் தொடங்க அனுமதி அளித்து விவசாயத்தை அழித்து வருகிறது. வாழை, நெல், மஞ்சள் பயிரிட்ட இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் தான் கண்ணில் தென்படுகின்றன. எனவே தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சென்னையில் ஓடும் கூவத்தை விட அதிகளவு மாசடைந்த ஆறாக தாமிரபரணி ஆறு மாறும்.

தமிழ்நாட்டுக்கு ஜி.எஸ்.டி. மிகப்பெரிய பாதிப்பு. தீப்பெட்டி தொழிற்சாலைகள், பட்டாசு தொழிற்சாலைகள், மோட்டார் உற்பத்தி தொழிற்சாலைகள், திண்டுக்கல் பூட்டு போன்றவைகளுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்பட்டு உள்ளது. அதனால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்