தவான்,கோஹ்லி அபாரம்: இந்திய அணி அசத்தல் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அறிமுக போட்டியில் இந்தியாவின் குர்னால் பாண்ட்யா (58 ரன்), பிரசித் கிருஷ்ணா (4 விக்கெட்) வெற்றிக்கு கைகொடுத்தனர்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி புனேயில் நடந்தது. இந்திய அணியில் குர்னால் பாண்ட்யா, பிரசித் கிருஷ்ணா அறிமுகமாகினர். ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்த போது ரோகித் (28) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய மற்றொரு துவக்க வீரர் தவான், அடில் ரஷித் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய கேப்டன் விராத் கோஹ்லி, தன்பங்கிற்கு அரைசதமடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த போது கோஹ்லி (56) அவுட்டானார். ஸ்ரேயாஸ் ஐயர் (6) ஏமாற்றினார். ஷிகர் தவான் (98) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஹர்திக் பாண்ட்யா (1) நிலைக்கவில்லை. பின் இணைந்த லோகேஷ் ராகுல், குர்னால் பாண்ட்யா அரைசதம் கடந்தனர்.
இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்தது. ராகுல் (62), குர்னால் (58) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 3, மார்க் உட் 2 விக்கெட் கைப்பற்றினர்.
கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு பேர்ஸ்டோவ் (94), ஜேசன் ராய் (46) நம்பிக்கை தந்தனர். ஸ்டோக்ஸ் (1), கேப்டன் மார்கன் (22), பட்லர் (2) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்ற இங்கிலாந்து அணி 42.1 ஓவரில் 251 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்டாகி’ தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட் கைப்பற்றினார். இந்திய அணி 1-0 என, முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி வரும் மார்ச் 26ல் புனேயில் நடக்கிறது.