தலாக் முறை குரான் போதனைகளுக்கு எதிராக உள்ளது: உயர் நீதிமன்றம்

மும்முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முஸ்லிம் சட்டம் குரான் போதனைகளுக்கு எதிரானது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிபதி சுனீத் குமார் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது நீதிபதி, மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை அல்லது உடனடி விவாகரத்து முறை மிகவும் கொடூரமானது, இத்தகைய நடைமுறை இந்தியாவை ஒரு தேசமாக பின்னடைவு காணச் செய்துள்ளது என்றார்.

“இந்தியாவில் பயன்படுத்தப்படும் முஸ்லிம் சட்டம் இறைத்தூதர் அல்லது குரான் புனித போதனைகளின் உணர்வுகளுக்கு எதிரான திசையில் செல்கிறது. இதே போன்ற தவறான கருத்தாக்கம்தான் மனைவியின் விவாகரத்து செய்யும் உரிமையையும் சீர்குலைத்து வருகிறது.

மேலும், இஸ்லாத்தில் விவாகரத்து என்பது மிக மிக அவசரகாலத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இருவரையும் சேர்த்து வைக்கும் அனைத்து விதமான முயற்சிகளும் சாத்தியங்களும் தோல்வியடைந்த நிலையில் மட்டுமே இருதரப்பினரும் தலாக் முறைக்குச் செல்ல அனுமதிக்கிறது.

எந்த ஒரு பிரிவினரின் தனிச்சட்டமும் அரசியல் சாசன ரீதியாக தனிமனிதர்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் மீது தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியாது.

சிலபல மதகுருமார்களின் தங்களுக்கேயுரிய குரான் விளக்கங்களை வைத்துக் கொண்டிருக்கும் தந்தை வழி ஆதிக்க பிடிகளில் பெண்கள் சமுதாயத்தை வைத்திருக்க முடியாது.

நீதித்துறை மனசாட்சி இந்த தலாக் முறையினால் தொந்தரவடைந்துள்ளது. கணவர் ஒருவர் தன்னை விட பாதி வயது குறைந்தவர் மீது கவரப்பட்டுள்ளார் என்ற காரணத்திற்காக தவறே செய்யாத முதல் மனைவி வேறொரு வாழ்க்கையை வாழ வேண்டியுள்ளது. முஸ்லிம் கணவர் ஒருபடித்தான அதிகாரத்தை தன் கையில் வைத்துக் கொண்டு உடனடி விவாகரத்து என்ற தீமையை பெண்கள் மீது செலுத்துவது இஸ்லாமிய போதனைகளுக்கு விரோதமானது.

குரான் சட்டங்களின் படி முஸ்லின் ஆணுக்கு கூடுதல் அதிகாரம் உள்ளது என்பது ஒரு பொதுப்புத்தி தப்பறை. குரான் போதனைகளின் படி இப்படிப்பட்ட கலப்பற்ற அதிகாரத்தின் மூலம் திருமணங்களைக் கலைப்பதற்கு இடமில்லை” என்று நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Keywords: மும்முறை தலாக் விவாகரத்து, குரான், அலஹாபாத் உயர்நீதிமன்றம் கருத்து, இந்தியா, முஸ்லிம் சட்டம்