தற்போதைய சூழ்நிலையில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக்கூடிய தகுதி விக்னேஸ்வரனுக்கு அவர்களுக்கே உண்டு – யாழ்ப்பாணத்தில் வெளியாகியுள்ள அறிக்கை

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தமிழர்கள், தமது தலைவர் என்று எவரையாவது குறிப்பிட்டால் அது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனையே குறிப்பதாக அமைந்திருந்தது. அந்த அளவுக்கு ஒட்டு மொத்தத் தமிழர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு தலைவராக அவர் காணப்பட்டார். தமிழர் பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற அனைத்துப் பேச்சுக்களிலும் பிரபாகரனால் நியமிக்கப்பட்டவர்களே பங்குபற்றினார்கள். புலிகளின் தலைமைக்கு அந்த அளவுக்கு அன்று மதிப்பு வழங்கப்பட்டது.

பிரபாகரன் தமது இளவயதிலேயே புலிகள் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர். மிக நீண்ட காலமாக வேறு எவராலும் அசைக்க முடியாத நிலையில் அந்தப் பதவியில் அமர்ந்திருந்தவர்.அவரது நேர்மையும் கொள்கைப் பற்றுறுதியும், இனத்தின் மீது கொண்ட வாஞ்சையும் உலகத் தலைவர்களில் ஒருவராக அவரை அடையாளம் காட்டின. பிரபாகரனுக்குப் பிறகு உறுதியானதொரு தலைமை ஈழத்தமிழர்களுக்கு வாய்க்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டேயாக வேண்டும். உலகத் தலைவர்களின் வரலாற்றை நாம் புரட்டிப் பார்த்தால் அவர்கள் தமது திறமையாலும் உழைப்பாலும் தலைமைப் பதவியை எட்டிப் பிடித்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

ஓர் இனத்தின் தலைமைத்துவம் என்பது வெறுமனே அரசியலை மட்டும் மையமாகக் கொண்டதல்ல. ஆனால் காலமாற்றத்தின் காரணமாக அரசியல் தலைவர்களே மக்கள் தலைவர்களாக மாறியுள்ளனர்.இந்த வகையில் தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழர்களின் தலைவராக இரா.சம்பந்தன் விளங்குகின்றார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய நான்கு கட்சிகளின் இணைப்பில் உருவாக்கப்பட்டது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. கூட்டமைப் பின் தலைவர் என்ற வகையில் சம்பந்தன் தமிழர் தலைவராகக் கருதப்படுகின்றார்.தற்போது ஒரு பிரிவினர் சம்பந்தனின் தலைமைக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.சம்பந்தன் ஒரு பலவீனமான தலைவராகவே இவர்களால் சித்தரிக்கப்படுகின்றார்.

இதேவேளை கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலரும் சம்பந்தனைத் தரக் குறைவாக விமர்சித்து வருகின்றனர்.இத்தகையவர்கள் இன்னமும் கூட்டமைப்பில் ஒட்டிக் கொண்டிருப்பது நியாயமான தல்ல.அண்மைய நாட்களாகவே ஈழத் தமிழர்கள் மத்தியில் மாற்றுத் தலைமை என்ற பேச்சு அடிபட்டு வருகின்றது. ஆனால் அதற்குத் தகுதியான ஒருவர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் ஏதோவொரு வேகத்தில் ஒரு சிலர் சீ.வி.விக்னேஸ்வரனின் பக்கம் தமது சுட்டுவிரலை நீட்டுகின்றனர். அவர்தான் ஒரு ஊழல் அற்ற தலைவர் என்பதையும் சிலர் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே தற்போதைய சூழ்நிலையில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக்கூடிய தகுதி விக்னேஸ்வரனுக்கு அவர்களுக்கே உண்டென்பதை நாம் உணருகின்ற காலம் விரைவில் வரவேண்டும். அப்போது தான் தமிழ் மக்கள் தங்களுக்கு விடிவு நிச்சயம் என்பதை உணர்வார்கள்”இவ்வாறு இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.