‘தற்போதைய சூழலில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலாது’: ஆளுநர் கூறியதாக திருமாவளவன் தகவல்

தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரியபோது ‘தற்போதைய சூழலில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலாது’ என ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொ.திருமாவளவன் கூறினார்.

முன்னதாக இன்று (ஆகஸ்ட் 30) காலை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொ.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் சந்தித்தனர்.

பின்னர் நால்வரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய திருமாவளவன், “தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரினோம். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்துள்ளனர். எனவே, உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் எனக் கோரினோம்.

ஆனால், ஆளுநரோ தற்போதைய சூழலில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. அதிமுக இரு அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. 19 எம்.எல்.ஏ.,க்களும் முதல்வரை மாற்ற வேண்டும் என்று கோரினரே தவிர கட்சித் தாவலில் ஈடுபடவில்லை. அதேபோல் அதிமுகவிலிருந்து 19 பேரை நீக்குவதாக கட்சியும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் 19 பேரும் அதிமுகவினர் என்றே எண்ணிக்கையில் கருத வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் இவ்விவகாரத்தில் தலையிட முடியாது என்றார்” எனத் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறும்போது, “அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டிகள் இணைய பாஜக பஞ்சாயத்து செய்தது. பாஜகவின் தலையீட்டால் அதிமுக மட்டுமல்ல தமிழக மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினோம். ஏற்கெனவே எதிர்க்கட்சித் தரப்பிலும் ஆளுநரிடம் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம். மக்களை சந்தித்து முறையிடுவோம்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசும்போது, “இங்கே நடந்ததுபோல் ஒரு பிரச்சினை கேரளாவிலோ மேற்கு வங்கத்திலோ அல்லது புதுச்சேரியிலோ நடந்திருந்தால் அங்குள்ள ஆளுநர்கள் இப்பிரச்சினையை எப்படி கையாண்டிருப்பார்கள் என என்னால் உணர முடிகிறது. தமிழகத்தில் ஜனநாயகப் படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள். அதிமுக ஆட்சியைத் தொடர வேண்டும் என்பதற்காக பாஜகவின் சொற்படியெல்லாம் நடக்கிறது” எனக் கண்டனம் தெரிவித்தார்.

பந்து உங்களிடம்தான் இருக்கிறது: ஜவாஹிருல்லா

மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, “தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என நாங்கள் கோரியபோது, “பந்து என்னிடம் இல்லை” என்றார் ஆளுநர். பந்து உங்களிடம்தான் இருக்கிறது. நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நாங்கள் கூறினோம்.

19 எம்.எல்.ஏ.,க்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்துள்ள நிலையில் அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்ற வேண்டியது ஆளுநரின் கடமை” என்றார்.