தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் போட்டியிட தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட தடை விதிக்க முடியாது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தமிழ் படத் தயாரிபாளர் சங்க ேதர்தல் நடத்தும் அதிகாரியாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டார். பின்னர் ேதர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றார். இதில் நடிகர் விஷால் கொடுத்த விண்ணப்பத்தை பரிசீலித்தார். பின்னர் நடிகர் விஷால் மனுவை ஏற்பதாக நீதிபதி ராஜேஸ்வரன் அறிவித்தார். இதை எதிர்த்து  தயாரிப்பாளர் கேயார் மற்றும் கிஷோர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடத்த நீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் விஷால் இந்த தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தார். இதை நீதிபதி ராேஜஸ்வரன் ஏற்றுக்கொண்டது தவறானது. நடிகர் விஷால் ஏற்கனவே நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக உள்ளார். அப்படி நடிகர் சங்கத்தில் ஒரு பதவி வகித்துவிட்டு தயாரிப்பாளர் சங்கத்திற்கும் போட்டியிட்டு வெற்றி பெறுவது தவறானது. நடிகர் விஷால்  தயாரிப்பாளர் சங்கத்திற்கு போட்டியிட தடை விதிக்க வேண்டும். நடிகர் விஷால் மனுவை தயாரிப்பாளர் சங்க தேர்தல் அதிகாரியும் நீதிபதியுமான ராஜேஸ்வரன் ஏற்றது தவறானது. அதை செல்லாது என்று அறிவித்து அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை  நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நடிகர் விஷால் தரப்பில் வக்கீல் கிருஷ்ணா, இந்த 2 மனுக்களையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்று தெரிவித்தார். இதை நீதிபதி கல்யாணசுந்தரம் ஏற்றுக்கெண்டு, விஷாலின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நீதிபதி ராஜேஷ்வரன் ஏற்றது செல்லும் எனக் கூறி, கேயார் உள்பட 2பேரின்  மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறினார்.

நீதிபதி தீர்ப்பில் மனுதாரர் கூறுவது போல் தயாரிப்பாளர் சங்கத்தின் விதியில் இல்லை. நடிகர் சங்கத்தின் நிர்வாகி தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடக்கூடாது என்று விதியில் இல்லை. இது சங்க செயற்குழு கூட்டத்தில் ஏற்பட்டது என்று தெளிவாக தெரிகிறது எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம், நடிகர் விஷால் போட்டியிட தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு கூறினார்.