தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு எதிரான சதி முயற்சி தொடருகின்றதா?

புpராந்திய அதிகாரங்களை மக்களுக்கு ஓரளவு வழங்கும் வகையில் ஸதாபிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மாகாணசபைகளுக்குள்ளே தங்களுக்கு நன்மைகளைத் தரும் வகையில் இயங்கவேண்டிய வடக்கு மாகாண சபையின் நிலைகண்டு தமிழ் மக்கள தாங்கொணாத் துயரம் கொண்டுள்ளனர் என்பது தற்போது நன்கு புலனாகின்றது தமிழ்மக்களுக்கு உதவுவதை விடுத்து வடக்கு மாகாண சபையை தங்களின் சுய பதவிக்காக பயன்படுத்துகின்றனரே! என்ற வேதனை மக்களிடம் இருக்கவே செய்கிறது. இதற்கு காரணம் உண்மையான சேவை நோக்கம் இல்லாதவர்கள் அங்கு மாகாண சபை உறுப்பினர்கள் என்ற பதவிகளை தங்கள் வசம் வைத்திருப்பதே என்பதையும் மக்கள் சுட்டிக்காட்டத் தொடங்கியுள்ளார்கள்.

இது இவ்வாறிருக்க, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைக் கொண்டுள்ள வடக்கு மாகாண சபை முதல்வர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு எதிராக கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை தொடர்ந்தும் சதித்திட்டம் தீட்டி வருகின்றது என்ற விபரங்கள் வெளிப்படையாகவே தெரியவந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளார்கள்.

முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு தொடர்ச்சியாக இடையூறுகள் விளைவித்தால், பதவியைத் தூக்கி எறிந்து விட்டுப் போய்விடுவார் என்ற எதிர்பார்ப்பே தற்போது கொழும்பிலும் மாகாணசபைக்குள்ளும் உள்ள சிலரின் எண்ணமாக இருக்கலாம் என்றே தற்போது நம்பப்படுகின்றது. இதற்காக வடக்கு மாகாண சபையில் இருக்கக் கூடிய சில உறுப்பினர்களை கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை பயன்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக வடக்கு மாகாண சபையால் செய்யக்கூடிய பணிகளைக் கூடச் செய்யமுடியாமல் உள்ளது என்பதை அண்மையில் முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் எடுத்துக்; கூறியுள்ள்தையும் நாம் அவதானிக்கவேண்டும்.

இதுதான் நிலைமை; வடக்கு மாகாண சபைக்கு உரிய அதிகாரங்களைத் தாருங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம்.தமிழர் தாயகப் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்றுங்கள். இவ்வாறு வடக்கின் முதலமைச்சர் வெளிநாட்டுத் தூதுவர்களிடமெல்லாம் எடுத்துக் கூறுவது கூட்டமைப்பின் தலைமைக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கிறது. இங்குதான் ஒரு உண்மையை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது வடக்கின் முதலமைச்சர் மீது தமிழ்மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இது தங்களை ஓரங்கட்டி முதல்வர் விக்னேஸ்வரனுக்கு அரசியல் செல்வாக்கை ஏற்படுத்தி விடுமோ என்ற பயமே அவரை வெளியேற்ற வேண்டும் என்ற சதித்திட்டத்திற்குக் காரணமாகிறது.
அதிலும் குறிப்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குப் பின் அடுத்த தலைவர் நானே! என்று நினைத்து அதற்கான திட்டங்களை வகுத்து வருபவர் முதல்வர் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் இருந்தால், தனக்குத் தலைமைப் பதவி கிடைக்காமல் போகும் என்று நினைத்துக்கொள்கிறார். அவரை நாம் இங்கு குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லை. மக்கள் அவரை நன்கு அடையாளம் கண்டுகொண்டுள்ளார்கள்.இதன் காரணமாகவே முதலமைச்சரை வெளியேற்ற வேண்டும். இதனை வடக்கு மாகாண சபையின் சில உறுப்பினர்களைக் கொண்டு செய்ய சதித்திட்டம் நடந்து வருகிறது.

ஆண்மையில் வடக்கின் முதல்வருக்கு எதிராக ஒரு சதித்திட்ட அரங்கேற்றம் நடந்துள்ளது. அது, யாழ்ப்பாண நகர அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடந்த கூட்டமாகும்.

எட்டு மாகாண சபை உறுப்பினர்கள், மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து கூடிய இந்தக் கூட்டம் தமிழ்மக்களின் அபிலாசைகளைச் சிதறடித்து வடக்கு மாகாண சபையின் அதிகாரத்தை நிர்மூலமாக்கி, ஆளுநரிடம் வடக்கு மாகாண சபையின் முழு அதிகாரத்தையும் தாரைவார்த்துக் கொடுத்து முதலமைச்சர் என்ற பதவியை வலுவிழக்கச் செய்கின்ற மிகப்பெரும் சதித்திட்டமாகும்.

இச்சதித்திட்டம் மிகவும் நேர்த்தியாக முறியடிக்கப்பட்டது என்பதும் இந்த முறியடிப்பு கூட்டமைப்பின் கொழும்புத் தலைமைக்கு மிகப்பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்த, அந்த ஆத்திரம் கொழும்புத் தலைமையின் சதித்திட்டங்களை அரங்கேற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களை கோபாவேசப்படுத்தியது என்பதும் வடக்கு மாகாணத்தில் மட்டுமல்ல, தீவின் அணைத்துப் பகுதிகளிலும் பரவலாக பேசப்படுகின்ற ஒரு செய்தியாக உள்ளது என்பது அங்கிருந்து கிடைக்கும் ஒரு முக்கிய விடயமாகும். எதுவாயினும் யாழ்ப் பாண நகர அபிவிருத்தியில் வடக்கின் முதல்வரை ஓரங்கட்டி ஆளுநர் மட்டத்தில் நடத்தி முடிக்க நினைத்தது மிகப்பெரும் தவறு. இவ்வாறான செயல்கள் நீண்டு கொண்டு போனால் அது முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்களை மாத்திரமல்ல முழு தமிழ் மக்களையும் பாதிக்கும் என்பதையும் இது எங்களுக்கான அதிகாரங்களை நாங்கள் இழப்பதற்குச் சமமானது என்பதையும் நாம் இவ்வாரம் கதிரோட்டத்தில் பகிர்ந்து கொள்கின்றோம்.