தமிழ்மொழியின் உரிமைக்காக தனித்துநின்று போராடிய கோடீஸ்வரன்

தமிழ் மொழியுரிமைப் போராட்ட வரலாற்றில் தடம் பதித்த வரலாற்று நாயகன் செல்லையா கோடீஸ்வரன் தனது 85வது வயதில் அமரத்துவம் அடைந்து விட்டார். தென்னிலங்கையில் உள்ள வத்தேகமவில் பிறந்த அவர் யாழ். மீசாலையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அரச சேவையில் எழுதுவினைஞராக இணைந்து கொண்ட அவர், தமிழ்மொழி மீதும், தமிழ் சமூகம் மீதும் தீவிர பற்றுக் கொண்டவராக விளங்கினார்.

தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டு, ‘அரச சேவையிலிருந்த தமிழ் அலுவலர்கள் சிங்கள மொழியில் தேர்ச்சியடைய வேண்டும். தவறினால் படி, பதவி உயர்வுகள் மறுக்கப்படுவதுடன் சேவையிலிருந்து எதுவித இழப்பீடுகளும் இன்றி நீக்கப்படுவார்கள்’ என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. அப்போது கேகாலை கச்சேரியில் பணிபுரிந்து கொண்டிருந்த கோடீஸ்வரன் குறித்த விதிக்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தொடுத்தார். அவருக்கு அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் பக்கத் துணையாகச் செயற்பட்டதுடன் தமிழ் மக்களும் துணை நின்றனர்.

கேகாலை நீதிமன்றத்தின் அன்றைய நீதிபதி கிரெஸ்டர், தனிச்சிங்களச் சட்டம் செல்லுபடியற்றதென்றும் அதனால் தமிழ் அரச அலுவலர் சிங்களத்தில் சித்தியடைய வேண்டுமென்ற விதி ஏற்புடையதல்ல என்றும் தீர்ப்பளித்தார். அத்தீர்ப்புக்கெதிராக அரசாங்கம் மேன்முறையீடு செய்தது. மேன்முறையீட்டை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், அரச அலுவலர் அரசாங்கத்திற்கெதிராக வழக்குத் தொடுக்க முடியாது என்று தீர்ப்பளித்து கேகாலை நீதிமன்றத் தீர்ப்பை செல்லுபடியற்றதாக்கியது.

மேன்முறையீட்டுத் தீர்ப்புக்கெதிராக இங்கிலாந்தின் பிரிவுக் கவுன்ஸிலுக்குக் கோடீஸ்வரன் சார்பில் முறையிடப்பட்டது. இங்கிலாந்தின் மேன்முறையீட்டு நீதிமன்றமான பிரிவுக் கவுன்ஸில் அரச அலுவலர் அரசாங்கத்திற்கெதிராக வழக்குத் தொடுக்கும் உரிமையுள்ளதென்று தீர்ப்பளித்து இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வலுவற்றதாக்கியதுடன் தனிச் சிங்களச் சட்டத்தின் செல்லுபடித் தன்மையை ஆராய்ந்து தீர்ப்பளிக்கும்படி இலங்கை உயர் நீதிமன்றத்திற்கு வழக்கை திருப்பி அனுப்பியது.விசாரணைக்காக அனுப்பப்பட்ட அவ்வழக்கு விசாரணையின்றி கிடப்பில் போடப்பட்டு, 1972 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பினூடாக கைவிடப்படும் நிலைக்கு ஆளாக்கப்பட்டது. இவ்வாறு சட்ட ரீதியாக அகிம்சாவழியில் தமிழ்மொழியின் உரிமையை நிலைநாட்ட முன்னின்று அரசாங்கத்திற்கெதிராக அரச அலுவலராக இருந்த நிலையிலும் துணிந்து நின்று போராடியவர் அமரர் கோடீஸ்வரன்.

மொழிவழித் தொழிங்சங்கங்களின் குறிப்பாக அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் துணையுடனும் தமிழ் மக்களின் நிதி மற்றும் ஆதரவு, ஒத்துழைப்புடனும் நடத்தப்பட்ட இவ்வழக்கின் முடிவு எவ்வாறிருந்த போதிலும், எந்தவொரு அரசியல் அமைப்பினதும் ஒத்துழைப்பு இன்றியே வழக்கு இறுதிவரை நடத்தப்பட்டது.’கோடீஸ்வரன் மொழி வழக்கு’ என்று புகழ்பெற்ற இவ்விழக்கு தனியொருவரான கோடீஸ்வரனால் கொண்டு நடத்தப்பட்ட போதும், அனைத்து தமிழ் மக்களதும் உள்ளக்கிடக்கையையும், உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாயமைந்ததால் இலங்கைத் தமிழரின் மொழியுரிமைப் போராட்டத்தில் அழிக்க முடியாத வரலாறாகவும், பெறுமதிக்க செயற்பாடாகவும் அமைந்தது.

பின்னாளில் அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் தலைவராகவிருந்து செயற்பட்ட கோடீஸ்வரன், தன்னைத் தேடிவந்த பல அரசியல் பதவிகளை ஏற்றுக் கொள்ளவில்லை. திருகோணமலையில் புகழ்பெற்ற டொக்டர் சித்திரவேலுவின் மகளை மனைவியாக வரிந்துகொண்ட இவர், திருகோணமலைத் தமிழ் மக்களின் பெருமதிப்புக்கும் அன்புக்கும் உரியவராக விளங்கினார். திருகோணமலைத் தொகுதியில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்காத இவர், அரசியலில் ஈடுபட்டிருந்ததால் தமிழர்களின் தன்னிகரற்ற நேர்மையான அரசியல் தலைவராகியிருப்பார் என்பதில் ஐயமில்லை. தமிழ் மக்கள் வடக்கென்றும், கிழக்கென்றும், மலையகம் என்று பிரிந்து நிற்கக் கூடாதென்பதில் தீவிரம் கொண்ட கோடீஸ்வரன் மலையகத் தமிழர்களது உரிமைக்கும், நன்மைக்கும் குரல் கொடுக்கத் தயங்கியதில்லை. இந்திய வம்சாவளித் தமிழ் மக்களை சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் நாடு கடத்தும் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது, அதை எதிர்த்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊர்காவற்றுறைப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த வ. நவரத்தினத்தின் கரங்களைப் பலப்படுத்து முகமாக அவருடன் இணைந்து தமிழர் சுயாட்சிக்கழகத்தின் பொதுச் செயலாளராகச் செயற்பட்டார். பிரபல குடியியல் சட்டத்தரணியான கோடீஸ்வரன் என்றுமே சாதாரண மக்களில் ஒருவனாக அனைவரதும் அன்பைப் பெற்றவராகத் திகழ்ந்தார்.அன்னாரின் இறுதிக் கிரியையைகள் கடந்த திங்கட்கிழமையன்று நடைபெற்றது