தமிழ்நாடு மின்வாரியம் நிலுவைத் தொகை செலுத்தவில்லை: வல்லூர் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி நிறுத்தம் – தேசிய அனல் மின் கழகம் நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வல்லூர் அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து அமைத்துள்ள இந்த அனல் மின் நிலையம் 3 அலகுகள் கொண்டது.

இங்கு கிடைக்கும் 1,500 மெகாவாட் மொத்த மின் உற்பத்தியில், தமிழகத்தின் பங்காக 1066.95 மெகாவாட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள மின்சாரம் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

வல்லூர் அனல் மின் நிலையம் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் முதல் கடந்த மார்ச் வரை தமிழகத்துக்கு மின்சாரம் விநியோகம் செய்ததற்காக, தேசிய அனல்மின் கழகத்துக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 1,156 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலுவைத் தொகையை 26-ம் தேதிக்கு முன்பு (நேற்று) செலுத்த வேண்டும் என, தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்துக்கு ஏற்கெனவே தேசிய அனல்மின் கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆனால், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அந்தத் தொகையை செலுத்தவில்லை. இதனால், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், வல்லூர் அனல்மின் நிலையத்தின் 2-வது மற்றும் 3-வது அலகுகளில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய அனல் மின் கழக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்வெட்டு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாதிப்பு இல்லை என விளக்கம்

எனினும், இதனால் பாதிப்பு ஏதும் இல்லை என தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி, வல்லூர் அனல் மின் நிலையம் மூலம் பெறப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்தை 60 நாட்கள் வரை வட்டியின்றி செலுத்தலாம்.

வல்லூர் அனல் மின்நிலையத் தில் இருந்து பெறப்படும் மின் சாரத்துக்காக மாதந்தோறும் சராசரியாக ரூ.250 கோடி வரை செலுத்தப்படுகிறது. தற்போது 60 நாட்களுக்கு மேற்பட்ட நிலுவைத் தொகை ரூ.502 கோடி என்ற அளவில் உள்ளது. அதில், ரூ.200 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

வல்லூர் அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு ரூ.5.25 ஆகிறது. ஆனால், தமிழகத்தில் காற்றாலை மின்சாரத்தின் விலை சராசரியாக யூனிட் ஒன்றுக்கு ரூ.3.10-க்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது காற்றாலை மின் உற்பத்தி 2 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு ரூ.2.92 முதல் ரூ.3.95 வரை கிடைக்கிறது.

எனவே, வல்லூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை. காரணம், தமிழ்நாடு மின் பகிர்மான கழக அனல் மின்நிலையங்களில் மின் உற்பத்தி முழுமையாக உள்ளது. இதனால், தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை.

வல்லூர் அனல் மின்நிலையத் தில் இருந்து பெறப்படும் மின்சாரத் தின் விலை அதிகமாக இருப்ப தால், மின் தேவை ஏற்பட்டால், குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரத்தை முதலில் கொள் முதல் செய்யலாம் என்ற நிலை யில் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் உள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.