தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் தமிழ் வளர் மையங்கள் அமைக்கப்படும்: தென் ஆப்ரிக்காவில் அமைச்சர் பாண்டியராஜன் உறுதி

தென்ஆப்ரிக்காவின் டர்பன் நகரில், 4-வது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு நடந்தது. இதில், மொரிஷியஸ் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் தமிழ் அமைப்புகள், வர்த்த அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தமிழகம் சார்பில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

வாணிபம் என்பது தமிழர்கள் ரத்தத்தில் கலந்த ஒன்று. திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்ற பொன்மொழிக்கு இணங்க, பலநாடுகளுக்கும் சென்ற நமது முன்னோர் வாணிபம், தொழில்களில் ஈடுபட்டனர். இன்று உலகில் உள்ள 155 நாடுகளில் 9.81 கோடி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு மூலதன அமைப்பு

அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழகத்தில் தொழில் தொடங்க அனைத்து உதவி களையும் தமிழக அரசு முனைப்புடன் செய்து வருகிறது. தமிழகத்தில் அதிக அளவில் தொழில் தொடங்க அனைவரையும் தமிழக அரசின் சார்பில் வரவேற்கிறேன். பிற நாடுகளில் வசிக்கும் மக்கள் என்ற வகைப்பாடுகளில் முதல் இடத்தில் சீன மக்களும், இரண்டாம் இடத்தில் இந்தியர்களும் உள்ளோம். அயல் நாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் 52 சதவீதம் தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழர்களுக்காக தனியே ஒரு மூலதன அமைப்பு தொடங்கப்பட வேண்டும், அதற்கு இந்த மாநாடு தொடக்கமாக அமைய வேண்டும் என விரும்புகிறேன்.

உலக மொழிகளில் மதிப்பு மிக்க மொழிகளை யுனெஸ்கோ வகைப்படுத்தியுள்ளது. இந்தப் பட்டியலில், தமிழ்மொழி பதினாறாவது இடத்தில் உள்ளது. அயல்நாடுவாழ் தமிழர்கள், சில நாடுகளில் தமிழ் பேச இயலாத நிலையில்தான் உள்ளனர். அனைத்து நாடுகளில் உள்ள தமிழர்கள் நமது மொழியைப் பேசும்போது, நம் மொழி இவ்வரிசை யில் பத்து இடங்களுக்குள் இடம்பெறும் வாய்ப்புள்ளது.

இந்திக்கு பிரச்சார சபா இருப்பது போல் தமிழர்கள் பரவியுள்ள நாடுகளில் முதற்கட்டமாக 1 லட்சத்துக்கும் மேல் தமிழர்கள் வாழும் 17 நாடுகளில் தமிழ் வளர் மையங்கள் அமைக்கப்படும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல், தமிழர்களின் கலைப் பண்புகளை மேம்படுத்தும் வகையில் தமிழ்க் கலைகளை பயிற்றுவிக்கும் தமிழ் பண்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்படும். மேற்கத்திய இசை முறைக்கு கிரேடிங் முறை இருப்பது போன்று தென்னக இசை முறைக்கும் கிரேடிங் முறை ஏற்படுத்தப்படும் என்றார்.