தமிழக அரசியலில் ‘‘புதிய கட்சிகள் உருவாவது காலத்தின் கட்டாயம்’’ டி.ராஜேந்தர் அறிக்கை

‘‘தமிழக அரசியலில் புதிய கட்சிகள் உருவாவது காலத்தின் கட்டாயம்’’ என்று டி.ராஜேந்தர் கூறினார்.

லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘‘தமிழக அரசியலில் இன்றைய சூழ்நிலையில் எம்.ஜி.ஆர். இல்லை. ஜெயலலிதாவும் இல்லை. தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் ரீதியாக சற்று பாதிக்கப்பட்டு இருக்கிறார். கருணாநிதியிடம் ஆசிபெற்று சிலர் புதிதாக கட்சி தொடங்குகிறார்கள். இது காலத்தின் கட்டாயம்.

கருணாநிதி இக்கட்டாக இருந்த கால கட்டத்தில், 1984–ம் ஆண்டு எனது 28–வது வயதில் அவர் முடங்கிவிடக்கூடாது என்பதற்காக, அவரது தொண்டனாக எனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினேன். வைகோ தி.மு.க.வை உடைத்தபோது, கருணாநிதி என்னை அழைத்தபோது, கழகத்தின் நலனுக்காக ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நான் அரும்பாடுபட்டு நடத்திய தாயக மறுமலர்ச்சி கழகத்தை, தி.மு.க.வோடு இணைத்தேன்.

கடித ஏடு

ஆண்டவன் அருளால் என் அரசியல் வாழ்வு ஆகிவிடக்கூடாது சும்மா. எனக்கு வழிகாட்டட்டும் நாடறிந்த நால்வரின் ஆன்மா. அதனால்தான் டி.ஆரின் லட்சிய தி.மு.க. கடித ஏடு தொகுப்பிலே போட்டிருக்கிறேன், ஈரோட்டு தந்தை பெரியாரோடு, அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், அம்மா.

தி.மு.க.வுக்காக பலகாலம் உழைத்த எம்.ஜி.ஆர். தூக்கி எறியப்பட்டார். எனக்கும் அப்படித்தான் ஒரு நிலைமை. இன்றைய தி.மு.க. என்பது செயல் தலைவர் ஸ்டாலின் தி.மு.க. என்றாகிவிட்டது.

இனி தி.மு.க. பாடு. அது ஸ்டாலின் பாடு. அவர் கருணாநிதி பெற்றெடுத்த பிள்ளை. நானோ, கருணாநிதி கண்டெடுத்த தத்துப்பிள்ளை. ஒரு விதத்தில் பார்த்தால், நான் தி.மு.க.விற்கு பயன்பட்டு தூக்கி எறியப்பட்ட கறிவேப்பிலை! பரவாயில்லை.’’

இவ்வாறு டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.