தமிழகம், புதுச்சேரி உள்பட 6 மாநிலங்களில் லாரி ஸ்டிரைக் தொடங்கியது

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியை உயர்த்தியதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

மேற்கண்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று கோரியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் 30–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் (‘ஸ்டிரைக்’) ஈடுபடப்போவதாக தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து இருந்தது.

அதன்படி நேற்று லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது, இதனால் நேற்று காலை 6 மணி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் சுமார் 30 லட்சம் லாரிகள் ஓடவில்லை. தமிழகத்தில் மட்டும் 4½ லட்சம் லாரிகள் ஓடவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

சரக்குகள் தேக்கம்

இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்குள் லாரிகள் எதுவும் வரவில்லை. இதேபோல், தமிழகத்தில் இருந்தும் வெளி மாநிலங்களுக்கு லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் சரக்குகள் தேக்கம் அடைந்து உள்ளன. குறிப்பாக, அரிசி, பருப்பு, எண்ணெய், கோழி தீவனங்கள், முட்டைகள் போன்றவை எல்லா மாவட்டங்களிலும் தேங்கிக்கிடக்கின்றன. தமிழகத்தில் மட்டும் ரூ.1,500 கோடிக்கு சரக்குகள் தேங்கி உள்ளன.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக நேற்று ஒரு நாள் மட்டும் தமிழக லாரி உரிமையாளர்களுக்கு ரூ.200 கோடியும், 6 மாநிலங்களிலும் சேர்த்து ரூ.1,000 கோடியும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

அமைச்சருடன் பேச்சுவார்த்தை

இந்த நிலையில், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் எம்.ஆர்.குமாரசாமி தலைமையில் லாரி அதிபர்கள் நேற்று மதியம் சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சந்தித்து 30 நிமிடம் பேசினார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில் தென்மாநில லாரி உரிமையாளர் சம்மேளன துணை தலைவர் என்.பி.வேலு, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன செயலாளர் தன்ராஜ், நாமக்கல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் வாங்கிளி, சங்ககிரி லாரி உரிமையாளர் சங்க தலைவர் செல்வராஜ், சேலம் லாரி உரிமையாளர் சங்க தலைவர் சென்னகேசவன், சென்னை புக்கிங் ஏஜெண்ட் அசோசியே‌ஷன் தலைவர் குமார், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ், செயலாளர் ராஜகோபால், தமிழ்நாடு டிப்பர் லாரி சம்மேளன தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தோல்வியில்முடிந்தது

அப்போது, லாரி உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கைகளை அமைச்சரிடம் தெரிவித்து, அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு அமைச்சர் காலஅவகாசம் கேட்டார். ஆனால், ஏற்கனவே 20 நாட்களுக்கு முன்பே தங்கள் கோரிக்கைகளை அரசிடம் அளித்துள்ளதாகவும், மேற்கொண்டு காலஅவகாசம் வழங்க முடியாது என்றும் லாரி உரிமையாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்துவிட்டனர். இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பின்னர், வெளியே வந்த தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் எம்.ஆர்.குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

போராட்டம் தொடரும்

தமிழக அரசு அழைத்ததன் பேரில் பேச்சுவார்த்தை நடத்த வந்தோம். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எங்களுடன் பேசினார். ஆனால், கால அவகாசம் கேட்டார். நாங்கள் மேற்கொண்டு காலஅவகாசம் அளிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டோம். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதும், பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியை குறைக்கவேண்டும் என்பதும் எங்களுடைய முக்கிய கோரிக்கைகள் ஆகும்.

எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடரும். அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் வருவோம். லாரிகள் வேலைநிறுத்தத்தால், தமிழகத்தில் ஒரு நாளைக்கு ரூ.1,500 கோடி வர்த்தகம் பாதிக்கும். தென்மாநில அளவில் ரூ.6 ஆயிரம் கோடி முதல் ரூ.7 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மெத்தனம்

மேலும், சில லாரி உரிமையாளர்கள் கூறும்போது, ‘‘எங்கள் கோரிக்கைகள் குறித்தும், வேலை நிறுத்த போராட்டம் குறித்தும் 20 நாட்களுக்கு முன்பே போக்குவரத்து துறை கமி‌ஷனரிடம் மனு அளித்தோம். ஆனால், அமைச்சரை சந்தித்தபோது, இப்போது தான் கோரிக்கை மனு தன்னிடம் வந்ததாக தெரிவித்தார். மேலும், பேச்சுவார்த்தையின்போது அமைச்சர் மட்டுமே இருந்தார். போக்குவரத்து துறை அதிகாரிகள் யாரும் உடன் இல்லை. அரசு மெத்தனம் காட்டுவதாகவே தெரிகிறது’’ என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

காய்கறி விலை உயரும்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் தினமும் 400 லாரிகளில் காய்கறி வரத்து இருக்கும். நேற்று காலை 6 மணிக்கு லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பாகவே பெரும்பாலான லாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்துவிட்டன. அதாவது, 300 லாரிகளில் காய்கறிகள் வந்து இறங்கின.

ஆனால், இன்று காலை லாரிகளின் வரத்து கணிசமாக குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். ஏறக்குறைய 200 லாரிகள் வரை மட்டுமே வரும் என நம்புவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே, கடும் வறட்சி காரணமாக பெரிய வெங்காயம், உருளைக்கிழக்கு ஆகியவற்றை தவிர மற்ற காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. தற்போது, லாரிகளில் காய்கறி வரத்தும் குறைந்துள்ளதால், 30 சதவீதம் வரை காய்கறி விலை உயரும் என்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் தெரிவித்தார்.

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் 3 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்து உள்ளன.

கேரளா

கேரளாவில் லாரிகள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக இன்று (வெள்ளிக்கிழமை) ஒருநாள் தனியார் பஸ்கள், டாக்சிகள், ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏப்ரல் 12–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் மலப்புரம் பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் நடைபெற்று வருவதால், மலப்புரம் மாவட்டத்துக்கு மட்டும் இன்றைய வேலை நிறுத்தத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.