தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா தேவி ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராகும் லக்?

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, கமலா தேவி ஹாரிஸ், 55, அமெரிக்காவின் துணை அதிபராகும், ‘லக்’ அடித்துள்ளது. அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், தன் துணை அதிபர் வேட்பாளராக, ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா தேவி ஹாரிஸ் பெயரை அறிவித்துள்ளார். அமெரிக்க வாழ் ஆப்ரிக்க மற்றும் இந்தியர்களின் ஓட்டுகளை குறி வைத்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப், 74, மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், 77, போட்டியிட உள்ளார்.

அதிபர் வேட்பாளரை முறையாக அறிவிக்கும், ஜனநாயக கட்சியின் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. இந்நிலையில், தன் துணை அதிபர் வேட்பாளராக, செனட் எம்.பி.,யான, கமலா ஹாரிஸ் பெயரை, ஜோ பிடன் அறிவித்துள்ளார். அதிபர் வேட்பாளர் தேர்தலில், கமலா ஹாரிசும் போட்டியிட்டார். இந்தாண்டு துவக்கத்தில், போட்டியில் இருந்து விலகிய அவர், ஜோ பிடனுக்கு ஆதரவு தெரிவித்தார்.

கமலா ஹாரிசின் தந்தை, ஆப்ரிக்காவை பூர்வீகமாக கொண்டவர்; தாய், சென்னையைச் சேர்ந்தவர். வழக்கறிஞரான கமலா ஹாரிஸ், கலிபோர்னியாவின் செனட் எம்.பி.,யாக உள்ளார். கமலா ஹாரிஸ், துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் மூலம், பல புதிய பெருமைகளை பெற்றுள்ளார். தேர்தலில் வென்றால், நாட்டின் முதல் பெண் துணை அதிபராவார்.

ஆப்ரிக்காவை பூர்வீகமாக கொண்ட முதல் பெண் துணை அதிபர் வேட்பாளர், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட முதல் பெண் துணை அதிபர் வேட்பாளர் என, பல சாதனைகளுக்கு அவர் சொந்தக்காரராகிறார். அதிபர் தேர்தல் தொடர்பாக, இதுவரை வெளிவந்துள்ள கருத்துக் கணிப்புகளில், டிரம்பை விட, ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில், ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிசை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளது, ஜோ பிடனுக்கு பெரும் சாதகமாக கருதப்படுகிறது. ஆப்ரிக்காவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கர், ஜார்ஜ் பிளாய்ட், போலீசாரால் கொல்லப்பட்ட விவகாரத்தை அடுத்து, அமெரிக்காவில் மிகப் பெரிய போராட்டங்கள் நடந்தன. அதேபோல், அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டுகளும், பல முக்கிய மாகாணங்களில் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதாக உள்ளன.

‘ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவரை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளது, ஜனநாயக கட்சிக்கு இரட்டிப்பு சாதகமாக இருக்கும்’ என, அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் மூலம், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்காவின் துணை அதிபராகும், ‘லக்’ அடித்துள்ளது.