தமிழகத்தில் 2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தொகுதி மறுவரையறை பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் தமிழகத்தில் 2018 பிப்ரவரி வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து கடந்த ஆண்டு அக்டோபரில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், இடஒதுக்கீடு தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கு காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனிஅதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அந்த வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் செப்டம்பர் 18-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு நவம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என கெடு விதித்து உத்தரவிட்டனர்.

ஆனால், இந்த உத்தரவுப்படி மாநில தேர்தல் ஆணையம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலை உரிய அவகாசத்துக்குள் நடத்தவில்லை எனக்கூறி மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அதுவும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தொடர்ந்த வழக்கும், இதே கோரிக்கையை வலியுறுத்தி திமுக தொடர்ந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் நேற்று ஒன்றாக விசாரிக்கப்பட்டது.

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், ‘‘தமிழகத்தில் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அப்பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரியில்தான் முடிவடையும். அதன்பிறகு தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை குறித்து தயாராக வேண்டும். எனவே, தமிழகத்தில் 2018 பிப்ரவரி வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.