தமிழகத்தில் ஸ்டாலின், கேரளாவில் பினராயி வெல்வர்; கருத்துக்கணிப்பில் தகவல்

ஏபிபி – சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றிப்பெற்று ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றும், கேரளாவில் இடதுசாரி முன்னணி அரசு மீண்டும் வென்று பினராயி விஜயன் முதல்வர் ஆவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கிவிட்டாலே கருத்துக்கணிப்புகள் வரத்துவங்கிவிடும். தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை தமிழகத்தை கைப்பற்ற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் யார் வெற்றிப்பெறுவார்கள் என்ற கருத்துக்கணிப்பை ஏபிபி – சி வோட்டர்ஸ் இணைந்து நடத்தியுள்ளன. தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக., கூட்டணியே பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் திமுக கூட்டணி, 43 சதவீத வாக்குகளுடன் 161-169 இடங்களில் வெற்றிப்பெறும் எனவும், அதிமுக கூட்டணி 30.6 சதவீத வாக்குகளுடன் 53-61 இடங்களிலும் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சி 7 சதவீதத்துடன் 2-6 தொகுதிகளிலும், அமமுக 6.4 சதவீதத்துடன் 1-5 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 12.3 சதவீதத்துடன் 3-7 தொகுதிகளிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. அதோபோல், ஸ்டாலின் தமிழக முதல்வராக வர வேண்டும் என 40 சதவீதம் பேரும், பழனிசாமி மீண்டும் முதல்வராக வர வேண்டுமென 29.7 சதவீதம் பேரும் விரும்புகின்றனர்.
அதேபோல், 140 சட்டசபை தொகுதிகள் கொண்ட கேரளாவில், 77-85 தொகுதிகளில் வென்று பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த முறை 92 தொகுதிகளில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 54-62 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். கடந்த தேர்தலை 47 இடங்களிலேயே வென்றது. பா.ஜ., 0-2 தொகுதிகளில் மட்டுமே வெல்லக்கூடும். 2016-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இடதுசாரி முன்னணிக்கு 0.6 சதவீதம் , காங்கிரஸ் கூட்டணிக்கு 0.9 சதவீதம், பா.ஜ.,வுக்கு 0.3 சதவீதம் வாக்குகள் சரியும் என ஏபிபி – சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது