தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உடனே உருவாக்க வேண்டும்: ஸ்டாலின்

தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்பை உடனே உருவாக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருப்பதை மனமார வரவேற்கிறேன்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பொது சேவையை மறந்து தன்னலத்துடனும், சுய நலத்துடனும் செயல்படுவது, நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகம் என்பதில் திமுக அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறது.

அந்த உன்னத நோக்கத்துடன்தான் பொது வாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தை 1973ல் திமுக ஆட்சி இருந்த போதே கொண்டு வந்தார் தலைவர் கருணாநிதி என்பதை இந்தநேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நாட்டில் ஊழலை ஒழிக்க லஞ்ச ஊழல் தடுப்பு சட்டம் இருந்தாலும், அதுபோன்ற வழக்கு விசாரணைகள் பல வருடங்கள் தாமதம் செய்யப்படுவதும், ஊழல் செய்து சொத்து குவித்தவர்கள் தப்பிவிடுவதும் அவ்வப்போது நிகழும் காட்சிகளாக இருக்கிறது.

இதுபோன்ற நிலை மாறவேண்டும் எனவும், பொதுவாழ்வில் தூய்மை – நேர்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக, பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டும் வெற்றி காண இயலவில்லை. பொது வாழ்வுக்கு வருவதே பணம் சம்பாதிக்க என்ற எண்ணம் ஏற்பட்டு, அரசியலை இளைஞர்கள் அறவே வெறுக்கும் சூழ்நிலை உருவாகி, ஆரோக்கியமான ஜனநாயகம் நாளுக்குநாள் அருகிக்கொண்டே செல்லும் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு விட்டது.

இந்நிலையில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று எந்நேரமும் ஆர்வம் காட்டுவதாக கூறும் மத்திய அரசு உரிய சட்டத்திருத்தங்களை கொண்டு லோக்பால் அமைப்பை ஏன் இன்னும் ஏற்படுத்தவில்லை? என்று பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு அன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு காட்டமாக கேள்வி எழுப்பியிருந்ததை சுட்டிக்காட்டி 24.11.2016 அன்று நான் வெளியிட்ட விரிவான அறிக்கையில், ”திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்டம் 2013 நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று, 16.1.2014 அன்று நடைமுறைக்கும் வந்துவிட்டது.

ஆனால், அதன்பிறகு மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான அரசு லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை, கடந்த தேர்தலின்போது ஊழலை ஒழிப்போம் என்று வாக்குறுதி அளித்த பாஜக இதுவரை அதனை நிறைவேற்ற முன்வரவில்லை” என்பதை கோடிட்டுக் காட்டியிருந்தேன்.

நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சி இல்லை என்ற காரணத்தைக் காட்டி லோக்பால் அமைப்பை உருவாக்குவதை மத்தியில் உள்ள பாஜக அரசு தாமதம் செய்வதால், லோக்பால் சட்டத்தில் உள்ள பிரிவு 63-ன்படி 365 நாட்களுக்குள் லோக் அயுக்தா அமைப்பை தமிழகத்தில் உருவாக்கியிருக்க வேண்டிய அதிமுக அரசு, இதுவரை அந்த அமைப்பை உருவாக்காமல் காலம் கடத்தி வருகிறது.

அதிமுக அரசின் முதல்வர்களாக இருந்த மறைந்த ஜெயலலிதா, அதன்பிறகு முதல்வர்களான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி என 3 முதல்வர்களும் லோக் ஆயுக்தா அமைக்கும் கோப்பை கிடப்பில் போட்டு, ஊழலை ஒழிக்கும் அந்த அமைப்பை உருவாக்கக் கூடாது என்பதில் ஒரே நோக்குடன் இருப்பதை நாம் அறிய முடிகிறது.

லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டால், அதிமுக ஊழல்வாதிகள் மாட்டிக்கொண்டு சிறைக்கம்பிகளை எண்ண வேண்டிவரும் என்ற அச்சத்தால் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.

இன்றைக்கு அதிமுகவினர் இரு அணிகளாகப் பிரிந்து ஒருவர் மீது ஒருவர் ஊழல் புகார்களை மாறி மாறி வெளியிடுவதுடன், தமிழகத்தின் தலைமைச் செயலாளர் முதல் அமைச்சர்கள் வரை பலரும் வருமானவரித்துறை சோதனைக்கு உள்ளாகி பல திடுக்கிடும் ஆவணங்கள் வெளியாவதும், அடுத்தடுத்து பலர் சிறைக்குச் செல்வதை எல்லாம் நாட்டு மக்கள் அனைவரும் நேரில் கண்டு வருகிறார்கள். இது போன்ற சமயத்தில் மாநிலத்திலும் லோக் ஆயுக்தா அவசியம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றக் கருத்து இளைஞர்கள் மத்தியில் எழுந்திருப்பதை காண முடிகிறது.

ஆகவே, உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளவாறு உடனடியாக லோக்பால் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மனதில் நிலைநிறுத்தி, மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க அதிமுக அரசு உடனே முன் வர வேண்டும்” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.