தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: வாட் வரி அதிகரிப்பின் விளைவு

பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரி விகிதத்தை தமிழக அரசு அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.78-ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.70-ம் அதிகரித்துள்ளது. நள்ளிரவு முதல் விலையேற்றம் அமலுக்கு வந்துள்ளது.

திருத்தப்பட்ட வாட் வரி விவரம்:

பெட்ரோல் மீதான வாட் வரி 27%-ல் இருந்து 34%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் டீசல் மீதான வாட் வரி 21.4%-ல் இருந்து 25% உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வாட் வரி உயர்வால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3.78 ஆக அதிகரித்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.70 ஆக உயர்ந்துள்ளது. திருத்தப்பட்ட வாட் வரியின் அடிப்படையில், தற்போது சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ74.47 ஆகவும் டீசல் விலை லிட்டர் ரூ.63.96 ஆகவும் அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் எடுத்துச் செல்லும் போக்குவரத்து செலவையும் சேர்த்தால் திருச்சி, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட நகரங்களில் இந்த விலையில் மேலும் மாற்றம் இருக்கும்.
பொதுவாக எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. அதேநேரத்தில் மாநில அரசுகளின் வாட் வரி விதிப்பாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வது குறிப்பிடத்தக்கது.

கடும் எதிர்ப்பு:
இதற்கிடையில், பெட்ரோலிய விற்பனை டீலர்கள் சங்கம் இந்த விலை உயர்வை கடுமையாக எதிர்த்துள்ளது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவர்கள் எனவே உடனடியாக உயர்த்தப்பட்ட வாட் வரியை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்றும் சாமானியர்கள் இதனால் பாதிக்கப்படுவர் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.