தனுஷின் அடுத்த புதுப்படங்களின் பட்டியல்

தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த ஃபக்கிர்’. கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்தப் படம், ஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்சில் தயாராகியுள்ளது. காமெடி அட்வெஞ்சர் படமான இது, ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (மே 30) இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷனில் தற்போது ஈடுபட்டுள்ளார் தனுஷ்.

கார்த்தியின் அடுத்தபடத் தலைப்பு ‘தேவ்’?
இந்தப் படத்துக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ ஆகிய படங்களின் மீதமுள்ள காட்சிகளில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இதுதவிர, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மீதமுள்ள காட்சிகளில் நடிக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், தனுஷின் அடுத்த 4 புதுப்படங்களைப் பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது. ராஜ்கிரண், ரேவதி, மடோனா செபாஸ்டியன், பிரசன்னா, சாயா சிங் நடிப்பில் தனுஷ் இயக்குநராக அறிமுகமான படம் ‘பவர் பாண்டி’. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. எனவே, தன்னுடைய இரண்டாவது படத்தை ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறார்.

அதன்பிறகு, தனுஷின் முதல் பாலிவுட் படமான ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார். அதைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். கார்த்திக் சுப்பராஜ் தற்போது ரஜினி நடிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அந்தப் படத்துக்குப் பிறகு தனுஷ் படத்தை இயக்குகிறார்.

அத்துடன், ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக இருக்கிறது. முதல் பாகத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜும், இரண்டாம் பாகத்தை சவுந்தர்யா ரஜினிகாந்தும் இயக்கிய நிலையில், மூன்றாம் பாகத்தை யார் இயக்கப் போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தனுஷே மூன்றாம் பாகத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.

முக்கியமாக, ‘அடுத்த வருடம் தனுஷுடன் இணையப் போகிறேன்’ என்று கூறியுள்ளார் அனிருத். அது ‘வேலையில்லா பட்டதாரி’ மூன்றாம் பாகமா அல்லது கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படமா? என்பது தெரியவில்லை. ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் நடிக்கும் படத்துக்கு அனிருத் இசை என்பது குறிப்பிடத்தக்கது.