தனி ஆளாக போராடுகிறேன்: பொன்.மாணிக்கவேல்

சிலை கடத்தல் வழக்கில் போலீசார் எனக்கு எதிராக திரும்பியதாக கருதவில்லை. தனி ஆளாக போராடுகிறேன் என சிலை கடத்தல் தடுப்பு வழக்கின் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கூறினார்.

‘மாநில, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சிறப்பு அதிகாரி, பொன் மாணிக்க வேல், பொய் வழக்கு பதிவு செய்யச் சொல்லி மிரட்டுகிறார்’ என, டி.ஜி.பி., அலுவலகத்தில், போலீஸ்காரர்கள் புகார் அளித்துள்ளனர். இன்றும் சில போலீசார் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த பொன்.மாணிக்கவேல் கூறியதாவது: என் மீதான குற்றச்சாட்டுகள் எதிர்பா்த்தது தான். சிலை கடத்தல் சிறப்பு அதிகாரியாக ஐகோர்ட் தான் என்னை நியமித்தது. என் மீது புகார் கூறிய 21 பேரும் 400 நாளில் ஒரு வழக்குப்பதிவு கூட செய்யவில்லை. அவர்கள், ஒரு குற்றவாளியை கூட கைது செய்யவில்லை. அவர்களின் முகத்தைக் கூட டிவியில் பார்க்கவில்லை. அவர்கள் மீது பரிதாபம் தான் வருகிறது. அவர்களின் பின்னால் இருந்து சிலர் இயக்குகிறார்கள்.

250 நாட்களாக பணிக்கு வராத ஒருவரை, மீண்டும் பணியில் சேர்க்க முடியாது. ஆனால், ஊழல் தடுப்பு பணிக்கு நியமிக்கின்றனர். மீண்டும் எப்படி பணிக்கு எடுக்க முடியும். வழக்கை முறையாக விசாரிக்காத அதிகாரிகளால் எங்களுக்கு தான் மன உளைச்சல் ஏற்படுகிறது.
பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவில் வழக்கை எங்களிடம் நீதிமன்றம் ஒப்படைத்துதது. பசுபதீஸ்வர் கோவில் வழக்கை ஒப்படைத்த பிறகு, விசாரணை அதிகாரி ஓடிவிட்டார். 5 டிஎஸ்பி 5 ஏடிஎஸ்பி தான் எனக்கு கொடுத்துள்ளனர். இவர்கள் மூலம் நான் இதுவரை ஒருத்தரை கூட கைது செய்யவில்லை. மிகக்குறைந்த போலீசாரை பயன்படுத்தி 47 பேரை கைது செய்துள்ளேன்.
இதற்கு, அந்தந்த மாவட்ட ரிசர்வ் போலீசார், உயரதிகாரிகளுக்கு தான் பெருமை கிடைக்கும். வெற்றி தோல்வி பற்றி பேசுவதற்கு இல்லை. கடமையை செய்கிறோம். சிலை கடத்தல் தடுப்பு வழக்கிற்கு ஐஜியான நானே விசாரணை அதிகாரியாக இருந்தேன். திருட்டு வழக்கில் ஐஜி ரேங்கில் உள்ள விசாரணை அதிகாரி நான் மட்டுமே

போலீஸ் உள்விவகாரங்களை வெளியில் பேசுவது முறையானது தானா? என் மீதான புகார்களுக்கு அவர்களால் ஆதாரங்கள் அளிக்க முடியுமா? புகார் கூறியவர்கள், பணி காலத்தில் இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்திருக்க வேண்டும். என்னிடம் நேரடியாகவோ, இமெயில் மூலமோ மனு அளித்திருக்க வேண்டும். அவர்களை பணியாற்றிய போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் மனு அளித்திருக்க வேண்டும். ஆனால், புகார் கூறிய ஒருவர் கூட மனு அளிக்கவில்லை. 6 மாத பணி காலம் முடிந்த பிறகு 3 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர்.
வழக்கின் நிலையை கொடுத்துவிட்டு செல்வதாக இருந்தால் யாரையும் நான் கட்டாயப்படுத்த முடியாது. கடமைகளை செய்யாத யாரையும் பணியில் இருந்து விடுவிக்க முடியாது. அவதூறு பேசுவது மன உளைச்சலை ஏற்படுத்துவது என்பது எல்லாம் பழங்கால குற்றச்சாட்டு. போலீசார் எனக்கு எதிராக திரும்புவதாக கருதவில்லை. தனி ஆளாக போராடுகிறேன்.

சிலை கடத்தல் தடுப்பு வழக்கில், போதிய ஆவணம், ஆதாரம் இல்லாமல் யாரையும் ரிமாண்ட் செய்ய முடியாது. எனக்கு எதிரான வழக்கில் பின்னடைவு ஏற்பட்டதால், சிலர் பிரச்னை செய்கின்றனர். அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை கைது செய்த மறுநாள், வழக்கை சிபிஐக்கு மாற்றுகிறாரகள். அடிப்படை ஆதாரம் இல்லாமல் எப்ஐஆர் போட சொன்னதாக கூறியவர்களுக்கு சட்ட அறிவு கிடையாது.

புகாரை வாங்கியவர்களுக்கும் சட்ட அறிவு கிடையாது. விருப்பப்பட்டு இருப்பவர்களை வைத்து தொடர்ந்து பணியாற்றுவேன்.விரும்பி வரும் போலீசாரை வைத்து சிலைகளை மீட்டு கொண்டு வருவேன். மனஉளைச்சல் இருப்பதாக கூறியவர்களுக்கு போலீசாக இருக்க தகுதி கிடையாது.

மக்களின் வரிப்பணத்தில் சாப்பிட்டு விட்டு, மன உளைச்சல் என கூறினால், அவர்கள் போலீசே கிடையாது. குறையில்லாமல் வேலை பார்க்கிறேன். என்னை நம்பலாம்.நல்ல எண்ணங்களும், ஆன்மிகமும் தான் என்னை செலுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, பொன்.மாணிக்கவேல் மீது போலீசார் புகார் அளித்த விவகாரத்தில் தலையிட ஐகோர்ட் மறுத்து விட்டது. ஆவணங்கள் இல்லாமல் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனக்கூறிவிட்டது.