தங்க கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வருக்கு தொடர்பு ?

துாதரகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, கேரளாவுக்கு, 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தொடர்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளும், ஐ.பி., எனப்படும் புலனாய்வு துறையும் விசாரணையை துவக்கியுள்ளன. இதனால், கேரள முதல்வர் பினராயி விஜயனின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக கிளை அலுவலகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, தங்க கடத்தல் நடப்பதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

சமீபத்தில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடத்திய சோதனையில், 30 கிலோ தங்கம் சிக்கியது. இதன் சர்வதேச மதிப்பு, 15 கோடி ரூபாய். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவரது பெயருக்கு, இந்த பார்சல் வந்திருந்தது. விசாரித்ததில், அவருக்கும், பார்சலுக்கும் சம்பந்தம் இல்லை என, தெரியவந்தது.

துாதரக அலுவலகத்தில் ஏற்கனவே மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய சர்ஜித், நிர்வாக செயலராக பணியாற்றிய ஸ்வப்னா ஆகியோர், இந்த கடத்தலின் பின்னணியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சர்ஜித் கைது செய்யப்பட்டார். ஸ்வப்னா தலைமறைவாகி விட்டார்.

இந்நிலையில், ஸ்வப்னா, கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்தது தெரியவந்தது. தகவல் தொழில்நுட்ப துறை செயலராகவும், முதல்வரின் முதன்மை செயலராக பணியாற்றியவருமான சிவசங்கருக்கும், ஸ்வப்னாவுக்கும் தொடர்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. இதையடுத்து, முதல்வரின் முதன்மை செயலர் பொறுப்பிலிருந்து சிவசங்கர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில், ‘தங்க கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வர் அலுலவகத்துக்கு தொடர்பு உள்ளது. ‘இது குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என, காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. இந்த குற்றச்சாட்டை மறுத்த பினராயி விஜயன், ‘தங்க கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் ஸ்வப்னாவை பற்றி எனக்கு தெரியாது. ‘அரசு பணியில் அவர் சேர்ந்ததும் எனக்கு தெரியாது’ என்றார். இதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள், இது குறித்து விசாரணையை துவக்கியுள்ளனர்.

அந்த நாட்டு துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: துாதரகத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. இது குறித்து விசாரணை துவக்கப்பட்டுள்ளது. விரைவில் உண்மை வெளியில் வரும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, மத்திய புலனாய்வு பிரிவும், தங்க கடத்தல் குறித்த விசாரணையை துவக்கியுள்ளதால், பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் பினராயி விஜயன் மீது, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவதால், அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.