தங்கள் நாட்டு பிரச்னை மீது தான் இந்திய அமெரிக்கர்களுக்கு ஆர்வம் !!

‘இந்திய பிரச்னைகள் மீது அதிக ஆர்வம் காட்டும் இந்திய அமெரிக்கர்கள், அமெரிக்க பிரச்னைகளை, மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர்’ என, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க மக்கள் தொகையில், ஒரு சதவீதத்துக்கு மேல், இந்திய அமெரிக்கர்கள் உள்ளனர். வாக்காளர்களில், ஒரு சதவீதத்துக்கும் குறைவாக உள்ளனர். இந்நிலையில், இந்திய அமெரிக்கர்களின் செயல்பாடுகள் பற்றி, பென்சில்வேனியா பல்கலை உட்பட மூன்று நிறுவனங்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளன.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:அமெரிக்கா தொடர்புடைய பிரச்னைகள், கொள்கைகளை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் இந்திய அமெரிக்கர்கள், இந்திய விவகாரங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு, குடியேற்ற பிரச்னை உட்பட பல விவகாரங்களில், அமெரிக்காவை விட, இந்தியா மீது தான் அவர்கள் அக்கறை காட்டுகின்றனர். வெள்ளையர்கள் ஆதிக்கம் தான், சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக உள்ளது என, இந்திய அமெரிக்கர்களில், 70 சதவீத ஹிந்துக்களும், 79 சதவீத ஹிந்துக்கள் அல்லாதவர்களும் கருதுகின்றனர்.

எனினும், இந்தியாவில், ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளது, சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் என, 40 சதவீதத்துக்கும் குறைவான ஹிந்துக்கள் தான் கருதுகின்றனர். இந்தியாவில், கடந்த, 2019ம் ஆண்டு இறுதியில் கொண்டு வரப்பட்ட, குடியுரிமை திருத்த சட்ட மசோதா, குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு, இந்திய அமெரிக்கர்களிடம், 55 சதவீதத்துக்கு மேல் ஆதரவு உள்ளது.

அமெரிக்க இந்தியர்களில் பெரும்பாலானோர், பா.ஜ., ஆதரவாளர்களாகவே உள்ளனர். காங்கிரசுக்கு, 12 சதவீதத்துக்கும் குறைவான ஆதரவே உள்ளது. எனினும், தங்களை கட்சிகளுடன் அடையாளப்படுத்திக் கொள்வதை, பெரும்பாலானோர் தவிர்க்கின்றனர். பெரும்பாலான இந்தியர்கள், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை ஆதரிக்கின்றனர்.

சீனாவுக்கு எதிரான எண்ணம், அமெரிக்க இந்தியர்களிடம் அதிகம் உள்ளது.அதேபோல், இந்தியாவுக்கான அமெரிக்க ஆதரவு, அதிகரிக்க வேண்டும் என, அவர்கள் விரும்புகின்றனர். இவ்வாறு, அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.