ட்ரம்ப் – கிம் சந்திப்பு மீண்டும் அடுத்தமாதம் நடைபெறும் என வெள்ளைமாளிகை அறிவித்தது

அணு ஆயுத கைவிடல் தொடர்பாக அடுத்த மாதம் நடைபெறும் இரண்டாவது உச்சி மாநாட்டில் ட்ரம்பும், கிம் ஜாங் உன்னும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று வோஷிங்டன் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இரு துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன்னும் உலகமே வியக்கிற வகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

அதில், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிப்பதற்காக உழைப்பது என ட்ரம்பும், கிம்மும் உறுதி எடுத்துக்கொண்டனர். ஆனால் அந்த ஒப்பந்தத்தினபடி, அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு வடகொரியா உறுதியான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அமெரிக்கா கருதுகிறது.
இருப்பினும், மீண்டும் உச்சி மாநாடு நடத்தி ட்ரம்பை சந்திக்க கிம்ஜாங் உன் விருப்பம் தெரிவித்தார்.

இந்த நிலையில், அவரது சிறப்பு தூதரான கிம் யாங் சோல், சில நாட்களுக்;கு முன்னர் வாசிங்டன் சென்று ட்ரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அவர், ட்ரம்பிடம் கிம் ஜாங் உன் தந்து அனுப்பிய கடிதத்தை வழங்கினார்.அதைத் தொடர்ந்து, அணு ஆயுத கைவிடல் தொடர்பாக அடுத்த பெப்ரவரி மாதம் இறுதியில் இரண்டாவது உச்சி மாநாடு நடத்தி டிரம்பும், கிம் ஜாங் அன்னும் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.