டொரண்டோவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 13 பேர் காயம்

டொரண்டோவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளம்பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும், 13 பேர் காயமடைந்ததாக கனடா நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

டேன்ஃபோர்த் மற்றும் லொகன் அவென்யூக்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச்சூட்டில், துப்பாக்கிதாரியும் உயிரிழந்தார்.

இதில் படுகாயமடைந்த சுமார் 8 வயது சிறுமி ஒருவர், ஆபத்தான நிலையில் உள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிலர் அப்பகுதியில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதற்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை.

அங்குள்ள உணவு விடுதியில் குடும்பத்துடன் இருந்த ஜோடி சிபிசி செய்தியிடம் கூறுகையில், பட்டாசு சத்தம் போல வெடிப்பதை தாம் கேட்டதாக குறிப்பிட்டார்.

உடனே அங்கிருந்த மக்கள் கத்திக்கொண்டு வெளியேறியதை பார்த்ததாக அவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை மாலையை உற்சாகமாக கொண்டாடிக்கொண்டிருந்த மக்கள் மீது தொடுக்கப்பட்ட இந்த “வெறுக்கத்தக்க” தாக்குதலை கண்டிப்பதாக டொரொண்டோ நகர மேயர் ஜான் டோரி கூறியுள்ளார்.

அருகாமை நாடான அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் கனடாவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறைவு என்றாலும், கடந்த சில வருடங்களாக டொரொண்டோ நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சிறு சிறு இடைவெளிகளில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

மொத்தமாக 20ல் இருந்து 30 முறை சுட்டிருப்பார்கள் என்கிறார், அங்கு நடந்து கொண்டிருந்த ஜான். “துப்பாக்கி சத்தத்தை கேட்ட நாங்கள் ஓடிவிட்டோம்” என்று அவர் தெரிவித்தார்.

தாக்குதலாளி குறித்து என்ன தெரியும்?

தாக்குதல்தாரி கொல்லப்பட்டதை மட்டும் உறுதிசெய்த டொரொண்டோ காவல்துறையினர் மேலதிக தகவல் எதையும் வெளியிடவில்லை. தாக்குதல்தாரி போலீசாரின் எதிர்தாக்குதலில் உயிரிழந்தாரா அல்லது தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தாரா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

போலீசாரிடமிருந்து மேலதிக தகவல் வெளிவரும் வரை இத்தாக்குதல் குறித்த எவ்வித முடிவுக்கும் வர வேண்டாமென டொரொண்டோ நகர மேயர் டோரி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

துப்பாக்கிதாரி சுடுவதற்கு முன்னர் அவரது முகத்தை பார்த்ததாக, துப்பாக்கிச்சூடு நடந்த இடத்துக்கு அருகிலுள்ள கடையொன்றின் ஊழியர் கூறியுள்ளார்.

“கடைக்கு உள்ளே இருந்து கண்ணாடி வழியாக நான் தாக்குதல்தாரியை பார்த்தபோது அவரும் என்னையோ, என்னருகில் இருந்த மற்றொரு பணியாளரையோ பார்த்தவுடன் கடையின் கண்ணாடியை நோக்கி சுட்டார். தாக்குதல்தாரி கருப்புநிற தொப்பி மற்றும் அடர் நிற ஆடையை அணிந்திருந்ததார்” என்று ஜெசிகா யங் என்பவர் டொரொண்டோ ஸ்டார் பத்திரிகையிடம் கூறியுள்ளார்.