டொனால்டு டிரம்ப் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார் !!

அதிபர் டொனால்டு டிரம்ப், நன்றாக தேறிவிட்டதால், அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்’ என, வெள்ளை மாளிகை டாக்டர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 74, அவரது மனைவி மெலானியா, 50, ஆகியோருக்கு, சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானது.மெலனியா, வெள்ளை மாளிகையிலேயே தன்னை தனிமைபடுத்திக் கொண்டார். மேரிலாண்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில், அதிபர் டிரம்ப் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனையில், நான்கு நாட்கள் சிகிச்சை பெற்ற பின், சமீபத்தில், டிரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார்.

அன்று முதல், வெள்ளை மாளிகையிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.சமீபத்தில், ‘பாக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘நான் நன்றாக இருக்கிறேன். இப்போதே பிராசார கூட்டங்களில் பங்கேற்க தயாராக இருக்கிறேன்’ என்றார்.இந்நிலையில், டிரம்ப் உடல்நிலை குறித்து, வெள்ளை மாளிகையின் டாக்டர் ஷான் கான்லே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அதிபர் டிரம்ப்புக்கு, கடந்த, 2ம் தேதிக்கு பின், காய்ச்சல் வரவில்லை. மருத்துவமனையில் இருந்து, வெள்ளை மாளிகை திரும்பிய பின், அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.நோய் அறிகுறி எதுவும் இன்றி, அவரது உடல்நிலை சீராக உள்ளது. சிகிச்சைக்கு அவர் நன்றாகவே ஒத்துழைத்தார்.அவருக்கு தொற்று கண்டறியப்பட்டு, இன்றுடன், 10 நாட்கள் ஆகிறது. இன்றுடன் அவரது சிகிச்சைகள் முடிகின்றன. தேர்தல் பிரசாரம், அதிபர் பணி போன்ற பொது வாழ்க்கையில் ஈடுபட தேவையான ஆரோக்கியத்துடன் உள்ளார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.