
டெல்லி திகார் சிறைச்சாலையில் இருக்கும் ப. சிதம்பரத்திடம் நாளை அமலாக்கத்துறை விசாரணை – தேவைப்பட்டால் ப.சிதம்பரத்தை கைது
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
டெல்லி திகார் சிறைச்சாலையில் இருக்கும் ப. சிதம்பரத்திடம் நாளை அமலாக்கத்துறை விசாரணை நடத்தவுள்ளது. தேவைப்பட்டால் ப.சிதம்பரத்தை கைது செய்யவும் அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இந்த வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்துள்ளது.
இதனை அனுமதிக்கக்கூடாது என்று சிதம்பரம் தரப்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.
ஒரே வழக்கில் ஒரே சம்பவத்தில் இரு முறை கைது செய்யக்கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது குறித்து அவர் மேற்கோள் கட்டி வாதிட்டதாகச் செய்திகள் தெரிவித்தன.
இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ப.சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.