டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளில் ஒருவருக்கு உடல்நிலை பாதிப்பு மருத்துவமனையில் அனுமதி

டெல்லி ஜந்தர் மந்தரில், தமிழக விவசாயிகள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்ட முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் 15-வது நாளான நேற்று அனைத்து விவசாயிகளும் மகாத்மா காந்தி படத்தை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்குழுவினரை புதுச்சேரி மாநில முதல் மந்திரி வி.நாராயணசாமி, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மணிசங்கர் அய்யர், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான சோம்நாத் பாரதி, கேரளாவின் விவசாயத்துறை மந்திரி சுனில் குமார் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, அ.தி.மு.க. எம்.பி. ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன் சிங்கை சந்தித்தனர். உடன், விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட சில விவசாயிகளை அழைத்துச் சென்றனர்.

போராடும் விவசாயிகள் தரப்பில் மீண்டும் ஒரு கோரிக்கை மனு ராதாமோகன்சிங்கிடம் அளிக்கப்பட்டது. இதே குழு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து தமிழகத்துக்கு வறட்சி நிவாரணத்தொகையை அதிகரிக்குமாறு கோரிக்கை மனு அளித்து வந்தது.

பிறகு, தம்பிதுரை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து விவசாயிகள் சார்பாக கோரிக்கை மனுவை அளித்தார்.

அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியின் தரப்பில் மைத்ரேயன் எம்.பி., விவசாயிகளை ஜந்தர் மந்தர் பகுதியில் சந்தித்து, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தங்கள் அணியின் ஆதரவை தெரிவிக்க அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.

தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு மற்றும் ஒரு சிலரை அழைத்துக் கொண்டு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை டெல்லியில் அவருடைய அலுவலகத்தில் சந்தித்தார்.

நேற்று மாலை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விவசாயிகளை ஜந்தர் மந்தர் பகுதிக்கு சென்று சந்தித்தார். பின்னர், அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை அழைத்துக்கொண்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். விவசாயிகள் தரப்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது.

இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 16வது நாளான இன்று போராட்டத்தில் விவசாயிகள் தங்கள் வாயில் பாம்புக்கறியை வைத்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த திருச்சியை சேர்ந்த மகாதேவன் என்பவர்  திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் இங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று டெல்லிக்கு சென்று விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, மத்திய, மாநில அரசுகள் மீது அவர் குற்றம்சாட்டினார்.