டெல்லியில் சேலை அணிந்த தமிழக விவசாயிகள் ‘தாலி அறுத்து’ போராட்டம்

டெல்லியில் இன்று (சனிக்கிழமை) சேலை அணிந்த ஆண் விவசாயிகள் ‘தாலி அறுக்கும்’ போராட்டம் நடத்தினர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியோரின் தலைவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவளித்து உரையாற்றினர்.
டெல்லியின் ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 33-வது நாளை நிறைவு செய்துள்ளது. இது, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது.
வங்கிக்கடன் ரத்து, வறட்சிக்கானக் கூடுதல் நிவாரணம் மற்றும் காவிரி மேலாண்மை அமைப்பது உட்படப் பலதும் அவர்கள் கோரிக்கைகளாக உள்ளன.
இதில், அன்றாடம் அரசு மற்றும் பொதுமக்கள் கவனத்தை கவரும் வகையில் பல்வேறு வகை போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்தவகையில் நேற்று ஆண் விவசாயிகள் 9 பேர் பெண்களை போல் சேலைகளை அணிந்து போராட்டம் நடத்தினர். இன்று மீண்டும் சேலையுடன், தாலியும் அணிந்த அதே விவசாயிகள், அதை அறுத்து போராட்டம் நடத்தினர். தாலிகளை மற்ற விவசாயிகள் அறுக்க அவர்கள் ஒப்பாரி வைத்து அழுது ஆர்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து அய்யாகண்ணு கூறுகையில், ‘ஒரு மாதத்திற்கு மேல் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்தித்து தீர்வு காண பிரதமர் நரேந்தர மோடியிடம் நேரம் இல்லை. இதற்காக விவசாயிகள் பிரச்சனையை சித்தரித்து அவரை வலியுறுத்தும் வகையில் இங்கு நாம் சேலையுடன் தாலியும் காட்டி அதை அறுத்து போராட்டம் நடத்தி உள்ளோம்’ எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு தமிழகம் மற்றும் தேசியக் கட்சிகளின் ஆதரவு கூடி வருகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய தலைவர் டி.ராஜா, அதன் விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் குணசேகரன் மற்றும் மாநிலப் பொதுச்செயலாளர் டாக்டர்.துரைமாணிக்கம் ஆகியோர் நேரில் வந்து ஆதரவளித்து உரையாற்றினர். இவர்களுடன். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நேரில் வந்திருந்தார்.