டுவிட்டரிலும் இணைந்தார் பிரியங்கா

சமீபத்தில் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா, இன்று (பிப்.,11) முறைப்படி டுவிட்டரிலும் இணைந்துள்ளார்.

உ.பி., கிழக்கு மண்டல பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு பிரியங்கா, லக்னோவில் இன்று முதல் முறையாக பிரசாரத்தை துவக்கினார். சகோதரரும், காங்., தலைவருமான ராகுலுடன் திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று பிரியங்கா பிரசாரம் செய்தார். இவருக்கு நூற்றுக்கணக்கான காங்., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரசாரத்தை துவக்கி அதே சமயத்தில், அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை பிரியங்கா துவக்கி உள்ளார். பிரியங்கா டுவிட்டரில் இணைந்துள்ளதாக காங்., கட்சியின் மைக்ரோ பிளாக் பக்கத்தில் காலை 11.49 மணியளவில் தகவல் பதிவிடப்பட்டது. அடுத்த 15 நிமிடங்களில் பிரியங்காவை டுவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5000 ஐ எட்டியது. ஒரு மணி நேரத்தில் பிரியங்காவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 25,000 ஐ கடந்தது. தற்போது (பகல் 2 மணி நிலவரம்) பிரியங்காவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 46000 ஐ கடந்துள்ளது.

டுவிட்டரில் பிரியங்காவை ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்ந்தாலும், அவர் குறிப்பிட 7 பேரை மட்டுமே பின் தொடர்கிறார். தனது சகோதரர் ராகுல் மற்றும் காங்., கட்சியை சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, அகமது பட்டேல், அசோக் கெலட், சச்சின் பைலட், காங்., கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் ஆகியவற்றை மட்டுமே பிரியங்கா பின்தொடர்கிறார். ராகுல் 2015 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டுவிட்டரில் இணைந்தார். அவரை இதுவரை 8 லட்சத்து 47 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.