டில்லியில் இந்து கோயில் இடிக்கப்பட்ட விவகாரம்: டில்லி கமிஷனருக்கு அமித்ஷா நோட்டீஸ்

டில்லியில் இந்து கோயில் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக டில்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக்கிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

ஜூன் 30 ம் தேதியன்று இரவு டில்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள இந்து கோயில் மர்மநபர்களால் இடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்து கோயில் இடிப்பு, அதன் தொடர்ச்சியாக நடந்த மோதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, டில்லி போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இதனையடுத்து அமித்ஷா நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார் டில்லி கமிஷனர். அவரிடம் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார் அமித்ஷா. அத்துடன் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமாக கேட்டுள்ளார். சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டில்லி போலீஸ் கமிஷனர், தற்போதைய சூழல் குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளோம். இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது என்றார்.
இதற்கிடையில் கோயில் இடிக்கப்பட்டு 2 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் அமித்ஷா எடுக்காதது ஏன் என காங்., மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளது. பா.ஜ., ஆட்சியில் மத கலவரம் நடந்து 2 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிறுபான்மையினர் பற்றியும், அவர்களின் மத உணர்வுகள் பற்றியும் ஆளும் கட்சிக்கு எந்த அக்கறையும் இல்லை என காங்., கட்சியின் அபிஷேக் சிங்வி, மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.