டிரம்பின் அமெரிக்க வருகையை எதிர்த்து 18 லட்சம் பேர் மனு – இங்கிலாந்து பிரதமர் நிராகரிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 18 லட்சம் பேர் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே நிராகரித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்பை, கடந்த மாதம் இங்கிலாந்து பிரதமர் தெரெசா மே, வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது, டிரம்பை இங்கிலாந்து வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். மேலும், இங்கிலாந்து ராணி எலிசபெத் உடன் விருந்து உண்ண வேண்டும் என ராணி விரும்புவதாக, தெரேசா கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்ட டிரம்ப் இந்த ஆண்டில் இங்கிலாந்துக்கு வருவதாக உறுதியளித்தார்.
இந்நிலையில், அகதிகளாக வருவோர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து டிரம்ப் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது உலகமெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளின் தலைவர்களும் டிரம்பின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
டிரம்பின் நடவடிக்கையை எதிர்த்து இங்கிலாந்தில் உள்ள பொதுமக்கள் சுமார் 18 லட்சம் பேர், இங்கிலாந்து பிரதமர் டிரம்புக்கு விடுத்த அழைப்பை திரும்ப பெற வேண்டும் என கையெழுத்து இட்ட மனுவை தயார் செய்தனர். குறைந்தது 1 லட்சம் பேர் கையெழுத்திட்டு மனு அனுப்பினால் பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பது இங்கிலாந்து அரசியலமைப்பு நடைமுறையாகும்.
டிரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 18 லட்சம் பேர் கையெழுத்திட்டு மனு செய்துள்ளதால், வரும் 20ம் தேதி பாராளுமன்றத்தில் இம்மனு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே, “அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து வரும் டிரம்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். 18 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ள மனு மீது உறுதியான பார்வையை அரசு கொண்டுள்ளது. ஆனால், அம்மனுவுக்கு ஆதரவாக நாங்கள் இருக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, டிரம்ப் இங்கிலாந்து வருகையின் போது பாராளுமன்றத்தில் பேசுவதாக இருந்த நிகழ்ச்சி நிரலுக்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.