டிடிவி தினகரனின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் கோரிக்கை

டிடிவி தினகரன் மீது  ஃபெரா வழக்குகள் இருப்பதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் விளக்குவதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி சென்றார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை டெல்லியில் இன்று (புதன்கிழமை) ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்துப் பேசினார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ”அதிமுக சட்டவிதிக்கு மாறாக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் எடுத்துரைத்தோம்.

தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும். ஆர்.கே. நகர் தேர்தலுக்கு முன்பாகவே இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கித் தர வேண்டும். டிடிவி தினகரன் மீது ஃபெரா வழக்குகள் இருப்பதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தோம்.

ஒழுங்கு நடவடிக்கையால் நீக்கப்பட்ட சசிகலா, 5 ஆண்டுகளுக்கு பிறகு தான் பொதுச்செயலாளர் தேர்தலில் நிற்க முடியும். அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளர் என்பது தேவையற்றது.

அதிமுகவில் இரு அணிகள் கிடையாது, ஒரே அணி அது நாங்கள் தான். தொண்டர்கள் எங்களிடத்தில் உள்ளனர், எம்எல்ஏக்களை மட்டுமே வைத்துக்கொண்டு நாங்கள் தான் அதிமுக என கூறி வருகின்றனர்.

எங்கள் கோரிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் நல்ல பதில் அளிக்கும்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.