ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணமாக பதிவு செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு; விசாரணை ஒத்திவைப்பு

ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காவல் ஆணையருக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சமீபத்தில் கடலூரைச் சேர்த்த வழக்கறிஞர் ஏ.கே.வேலன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்களில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து எந்த விவரமும் வெளியிடவில்லை. ஆளுநர் கூட அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அரசின் முதன்மை பொறுப்பில் உள்ளவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலவரங்களை வெளியிடவேண்டும்.

அப்போலோ மருத்துவமனை அனைத்தையும் மறைத்து விட்டது. எனவே இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்” என்ற கோரிக்கையை வைத்திருந்தார்.

இந்த மனு எழும்பூர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, சந்தேக மரண வழக்காக பதிவு செய்ய சென்னை காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏ.கே.வேலன் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.விமலா முன் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே இதேபோல வேறொரு நபர் தொடர்ந்த மற்றொரு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.