ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சசிகலா குடும்பத்தினர், அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 9-ம் தேதி முதல் தொடர் சோதனை மேற்கொண்டனர். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா என 3 மாநிலங்களில் 187 இடங்களில் 1800-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தினர்.

நாட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகளில் இது மிகப்பெரியது எனக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கடந்த 13-ம் தேதி வரை சோதனை நீடித்தது. இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் சசிகலாவின் உறவினர்களான விவேக் மற்றும் அவரது சகோதரிகள் கிருஷ்ணபிரியா, ஷகீலா, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளரான பூங்குன்றன் உள்ளிட்டவர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது பூங்குன்றன் அங்கிருந்தார்.

மேலும், சோதனை தொடங்கிய சற்று நேரத்தில் இளவரசியின் மகன் விவேக் போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்து சேர்ந்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது போயஸ் கார்டன் வேதா இல்லம் சசிகலா குடும்பத்தினரின் பராமரிப்பில் இருந்து வருகிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது பணியாற்றியவர்களே தற்போதும் உள்ளனர். பூங்குன்றன் அவ்வப்போது இங்கு வந்து சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வருமான வரித்துறையினர் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே ஜெயலலிதா வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடைபெறுவதை அறிந்து பத்திரிகையாளர்களும், அதிமுகவினரும் அதிக அளவில் அங்கு கூடினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வருமான வரித் துறை சோதனைக்கு எதிராக அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஜெயலலிதா வீட்டுக்கு சுமார் 200 மீட்டருக்கு முன்பாகவே அனைவரையும் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனை மட்டும் போலீஸார் வீட்டுக்குள் செல்ல அனுமதித் தனர்.

இந்த சோதனை நடந்து கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த சசிகலா ஆதரவாளரான வி.பி.கலைராஜன் கூறும்போது, ‘‘ஜெயலலிதா வசித்த வீடு அதிமுக தொண்டர்களுக்கு கோயில் போன்றது. பிரதமர் நரேந்திர மோடி கூட இந்த வீட்டுக்கு வந்துள்ளார். இப்போது அந்த வீட்டின் புனிதம் கெடும் வகையிலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் இந்த வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுகிறது” எனக் குற்றஞ்சாட்டினார்.

வருமான வரித் துறையினரின் இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கே.சி.பழனிச்சாமி, “போயஸ் கார்டன் இல்லத்தை சசிகலா குடும்பத்தினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காரணத்தால்தான் தற்போது அங்கு வருமான வரித் துறை சோதனை நடைபெறுகிறது. இந்த அவல நிலை ஏற்பட்டதற்கு சசிகலா குடும்பத்தினர்தான் பொறுப்பு” என்றார்.

வருமான வரித்துறை சோதனைக்கு எதிராக மறியலில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.