ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் உத்தரவில் பிரிட்டன் உள்துறை செயலர் கையெழுத்து

அமெரிக்க ராணுவ ரகசியங்களை ‘விக்கிலீக்ஸ்’ இணைய தளத்தில் அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (47) வெளியிட்டார். இதனால் விதிக்கப்படும் மரணதண்டனை மற்றும் துன்புறுத்தலுக்கு பயந்து அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேறினார்.

ஆஸ்திரேலியரான இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று இருந்தார். அமெரிக்காவில் இருந்து வெளியேறிய அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நைட்ஸ்பிரிட்ஷ் பகுதியில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கடந்த 2012-ம் ஆண்டில் அடைக்கலம் புகுந்தார். அவருக்கு ஈகுவேடார் அரசாங்கம் அரசியல் தஞ்சம் அளித்தது. எனவே அங்கு அச்சமின்றி நிம்மதியாக தங்கி இருந்தார்.

அவர் தஞ்சம் அடைந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு ஈகுவேடார் தூதரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கான உத்தரவை அந்நாட்டின் அதிபர் லெனின் மொரெனோ பிறப்பித்தார். ஈகுவேடார் தூதரகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் ஜூலியன் அசாஞ்சேவை லண்டன் மெட்ரோபாலிடன் போலீசார் கைது செய்தது. ஜூலியன் அசாஞ்சாவை, அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று அந்த நாடு கோரியிருந்தது.

இந்த நிலையில், ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்துவதற்கான உத்தரவில் பிரிட்டன் உள்துறை செயலர் சாஜித் ஜாவித் கையெழுத்திட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் விவகாரம் பிரிட்டன் நீதிமன்றத்திடமே உள்ளது எனவும் ஜாவித் விளக்கம் அளித்தார்.