ஜாகீர் நாயக்கை நாட்டிலிருந்து வெளியேற்ற 3 மலேசிய அமைச்சர்கள் பிரதமரிடம் கோரிக்கை

மலேஷியாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகிர் நாயக், இந்தியா சென்று, வழக்குகளை சந்திக்க வேண்டும் என அந்நாட்டு மனிதவள அமைச்சர் குலசேகரன் கூறியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்தவர் ஜாகிர் அப்துல் கரீம் நாயக். இஸ்லாமிய மத பிரசாரகர். பல்வேறு நாடுகளில் இருந்து, சட்ட விரோதமாக, 193 கோடி ரூபாய் நிதி பெற்று, இந்தியாவில், பல இடங்களில் சொத்து வாங்கி குவித்து உள்ளார். இது தொடர்பாக, அமலாக்கத் துறை, இவர் மீது வழக்குகள் தொடர்ந்து உள்ளது. விசாரணைக்கு ஆஜராகாமல், ஜாகிர் நாயக் மலேஷியாவில் பதுங்கியுள்ளார். அவரை நாடு கடத்த மலேஷியா மறுத்துவிட்டது.

இந்நிலையில், சமீபத்தில் ஜாகிர் நாயக் அளித்த பேட்டி ஒன்றில், மலேஷியாவில் வசிக்கும் ஹிந்துக்கள், மலேசிய பிரதமரை விட இந்திய பிரதமர் மோடிக்கு அதிகளவு விஸ்வாசமாக உள்ளதாக கூறியுள்ளார். இது அங்கு வசிக்கும் ஹிந்து மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மலேஷிய மனித வளத்துறை அமைச்சர் குலசேகரன் வெளியிட்ட அறிக்கை: மலேஷியாவில் வசிக்கும் ஹிந்துக்கள் நம்பகத்தன்மை குறித்த கருத்துக்காக ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர், வெளி நாட்டில் இருந்து வந்தவர். பொருளாதார குற்றங்கள் புரிந்தவர். மலேஷிய வரலாறு குறித்து அவருக்கு தெரியாது.
மலேஷியர்களுக்கு இருக்கும் தேசப்பற்றை அவமதிக்கும் வகையில், பேச அவரை அனுமதிக்கக் கூடாது. அவரது கருத்துகளும், நடவடிக்கைகளும், நிரந்தர குடியுரிமை கேட்பதற்கான தகுதியை பிரதிபலிக்கவில்லை. இது குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

மலேஷியா தனித்துவமான நாடு. மற்ற முஸ்லிம் நாடுகளை ஒப்பிடும் போது, இங்குள்ள தலைவர்களின் சமநிலையான நடவடிக்கைகள் காரணமாக, நாட்டில் அமைதி நிலவுகிறது. நாட்டின், உயர்ந்த சட்டங்கள் மதச்சார்பற்றவை. அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதிபடுத்துகிறது.
ஜாகிர் நாயக் காரணமாக, மக்கள் பிளவுபட வேண்டுமா? ஜாகிர் நாயக், மத ரீதியாகவும், இன ரீதியாகவும் தெரிவித்த கருத்துக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து, அமைதியையம், நிலைத்தன்மையையும் பாதுகாக்க வேண்டும். ஜாகிர் நாயக், மலேசியாவை விட்டு சென்று, இந்தியாவில் உள்ள பயங்கரவாத குற்றச்சாட்டுகள், பண மோசடி வழக்குகளை சந்திக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.