ஜஸ்டின் ட்ரூடோ: “கனடா பிரதமர் சட்டத்தை மீறினார்” – விசாரணை அமைப்பு குற்றச்சாட்டு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு ஊழல் வழக்கு விசாரணையில் கனடா சட்டத்தை மீறி உள்ளார் என்று நெறிமுறைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்று கண்டுபிடித்துள்ளது.

எஸ்.என்.சி லவாலின் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது செல்வாக்கு செலுத்த ஜஸ்டின் முயன்றதாக அந்த அமைப்பின் ஆணையர் கூறி உள்ளார். ஆணையரின் அறிக்கையை தாம் ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் அதே சமயம் அவரது அறிக்கையின் இறுதி முடிவில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். கனடா நாட்டில் அக்டோபரில் நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் இந்த விசாரணை முடிவானது ஒரு பிரச்சனையாக ஜஸ்டினுக்கு உருவெடுக்கலாம்.

அது என்ன எஸ்.என்.சி லவாலின் விவகாரம்?
எஸ்.என்.சி லவாலின் என்பது கனடா நாட்டைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனம். இந்த நிறுவனத்தில் 9,000க்கும் அதிகமான கனடா மக்கள் பணிபுரிகிறார்கள். லிபியாவில் கடாஃபி ஆட்சி காலத்தில் ஒரு கட்டுமான ஒப்பந்தத்தைப் பெற இந்த நிறுவனம் லிபிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது என்பதுதான் குற்றச்சாட்டு. இந்த விவகாரமானது விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சாதகமாக ஜஸ்டின் செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டப்படுகிரது.