ஜஸ்டின் ட்ரூடோ: கனடா பிரதமர் இனவெறி

தனியார் பள்ளி கொண்டாட்டம் ஒன்றில் தோலில் பழுப்பு நிறத்தில் வண்ணங்களைப் பூசி கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றது சர்ச்சையாகி உள்ளது.

இந்த நிகழ்வும் இப்போது நடந்தது இல்லை. 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு இது.

அந்த சமயத்தில் ஜஸ்டின் கல்வி நிலையம் ஒன்றின் பயிற்றுநராக இருந்தார். இந்த புகைப்படமானது’டைம்’ இதழில் வெளியானது.

இதனை தொடர்ந்து வருத்தம் தெரிவித்த அவர், “அரேபிய இரவுகளைக் கருப்பொருளாகக் கொண்டு கொண்டாடப்பட்ட நிகழ்வு அது. அதன் காரணமாக நான் அவ்வாறாக உடை அணிந்து இருந்தேன்” என்றார்.

தேசிய கனடிய முஸ்லிம் மன்றம் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் இயக்குநர் முஸ்தஃபா ஃபரூக், “பிரதமரின் இந்த செயல் கவலை தருகிறது. இது போன்ற பழுப்பு / கருப்பு வண்ண நிற முகமூடிகளை அணிவது நிந்திக்கும் செயல்,” என்றார்.

புதிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜக்மீத் சிங், இந்த புகைப்படமானது பிறரை அவமதிப்பது போல உள்ளதென தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 21ஆம் தேதி அங்குத் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் இந்த புகைப்படம் பெரும் விவாதத்தை அங்கு கிளப்பி உள்ளது.

தேர்தல் கருத்துக் கணிப்புகளும் இந்த தேர்தலானது ஜஸ்டினுக்கு கடினமான ஒன்றாக இருக்குமென்றே தெரிவிக்கின்றன.