ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? – ராகுலுக்கு நட்டா கேள்வி

ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழகம் வந்து ராகுல் நேரில் பார்த்து சென்ற நிலையில், “அதிகாரத்தில் இருந்த போது உங்கள் கட்சி ஜல்லிக்கட்டை தடை செய்து, தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்” என்று பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் இன்று வேளாண் சட்டங்கள், லடாக் பிரச்னை உள்ளிட்டவை சம்பந்தமாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார்.

முன்னதாக அவருக்கு பா.ஜ., தேசிய தலைவர் நட்டா டுவிட்டர் வாயிலாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். “தனது மாத விடுமுறையிலிருந்து திரும்பி வந்துள்ள ராகுலிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பதிலளிப்பார் என்று நம்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது: அருணாச்சல பிரதேசம் உட்பட ஆயிரக்கணக்கான கி.மீ தூரத்தை சீனர்களுக்கு நேரு பரிசளிக்கவில்லை என்பதை அவர் மறுக்க முடியுமா? ஏன் எப்போதும் காங்கிரஸ் சீனாவிடம் சரணடைகிறது. சீனாவுடனும், அவர்களது கம்யூனிஸ்ட் கட்சியுடனும் காங்கிரஸ் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய ராகுலுக்கு விருப்பம் உள்ளதா? அவரது குடும்பத்தால் நிர்வகிக்கப்படும் அறக்கட்டளை பெற்ற சீன நன்கொடையை திருப்பி அளிப்பாரா? அல்லது அவர்களின் கொள்கைகளை சீனப் பணம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் அதிகாரம் செய்வது தொடருமா?

இந்திய விவசாயிகளைத் தூண்டிவிடுவதையும் தவறாக வழிநடத்துவதையும் காங்கிரஸ் எப்போது நிறுத்தும்? சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை காங்., கூட்டணி ஏன் பல ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்தது. ஏன் குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்கவில்லை? காங்கிரஸ் அரசாங்கங்களின் கீழ் பல ஆண்டுகளாக விவசாயிகள் ஏழைகளாக இருப்பது ஏன்? எதிர்க்கட்சியாக இருக்கும் போது மட்டும் அவருக்கு விவசாயிகள் மீது அனுதாபம் ஏற்படுமா? அனைத்து வேளாண் கமிட்டிகளும் மூடப்படும் என ராகுல் பொய்களை பரப்புகிறார். கமிட்டி சட்டத்திற்கு எதிராக காங்.,ன் தேர்தல் அறிக்கை இருக்கவில்லையா?

ராகுல் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை ரசித்தார். அவர் ஆட்சியில் இருந்தபோது அவரது கட்சி ஏன் அதைத் தடைசெய்து, தமிழ் கலாச்சாரத்தை அவமதித்தது? இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகள் குறித்து அவர் பெருமைப்படவில்லையா? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.