ஜமால் கஷோக்ஜி: சௌதி பத்திரிகையாளர் ‘கொடூரமாக கொல்லப்பட்டதன்’ ஆதாரங்கள்

இஸ்தான்புல் நகரில் வரிசையாக மரங்கள் நின்றிருந்த அமைதியான ஒரு பகுதி வழியே நான் நடந்து சென்று, நிறைய கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தியிருந்த நிற கட்டடம் ஒன்றை நெருங்கினேன்.

ஓராண்டுக்கு முன்பு நாடு கடத்தப்பட்டிருந்த சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் படம் இதே கண்காணிப்புக் கேமராவில் பதிவானது. அதுதான் அவருடைய கடைசி படமாக இருக்கும்.

சௌதி அரேபிய தூதரகத்தில் அவர் நுழைந்தார். அங்குதான் அவர் கொலை செய்யப்பட்டார்.

ஆனால் தூதரகத்தை துருக்கி புலனாய்வுத் துறை உளவு பார்த்து வந்தது. இதற்கான திட்டமிடல், கொலை எல்லாமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒலிநாடாக்களை மிகவும் சிலர் மட்டுமே கேட்டிருக்கின்றனர். அதில் இரண்டு பேர் பிபிசியின் பனோரமா நிகழ்ச்சிக்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளனர்.

ஜமால் கஷோக்ஜி உயிரைவிடும் தருணத்தில் பேசியவற்றை பிரிட்டிஷ் வழக்கறிஞர் பாரோனெஸ் ஹெலனா கென்னடி கேட்டிருக்கிறார்.

“ஒருவருடைய குரலைக் கேட்பது, ஒருவருடைய குரலில் பயத்தை அறிவது, அதுவும் நேரடியாகக் கேட்பது மிகவும் கொடூரமானது. உடல் முழுக்க நடுங்கச் செய்யும் விஷயம் அது.”

பணத்துக்காக கொலை செய்யும் சௌதி முகவர்களுக்கு இடையில் நடந்த உரையாடல்களை கென்னடி விரிவாகக் குறிப்புகள் எடுத்துள்ளார்.

”அவர்கள் சிரிக்கும் குரலை நீங்கள் கேட்கலாம். அது உறைய வைக்கும் வகையில் உள்ளது. கஷோக்ஜி உள்ளே வரப் போகிறார், அவர் கொல்லப்படப் போகிறார், என்பதை அறிந்து அவர்கள் காத்திருந்தார்கள்.”

சட்டத்தை மீறி கொல்லப்பட்ட சம்பவம் பற்றி விசாரிக்க, ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி அக்னிஸ் கல்லாமர்டு தலைமையிலான குழுவில் சேருமாறு கென்னடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

மனித உரிமைகள் நிபுணரான கல்லாமர்டு, சர்வதேச கிரிமினல் விசாரணைக்கு உத்தரவிட ஐ.நா. தயக்கம் காட்டிய நிலையில், இந்தக் கொலை பற்றி விசாரிக்க தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தப் போவதாக என்னிடம் கூறினார்.

அவரும், கென்னடியும், அவர்களுடைய அரபி மொழி பெயர்ப்பாளரும் ஒலிநாடாக்களை கேட்க துருக்கி புலனாய்வுத் துறையினரை சம்மதிக்க வைக்க ஒரு வார காலம் தேவைப்பட்டது.

”திட்டமிட்டு, முன்கூட்டியே சதித் திட்டம் தீட்டி இது நடந்திருக்கிறது என்பதை நிரூபிக்க எனக்கு உதவ வேண்டும் என்பதுதான் துருக்கி தரப்பின் தெளிவான நோக்கமாக இருந்தது,” என்று அவர் கூறினார்.

முக்கியமான இரண்டு நாட்களில் பதிவான ஒலிநாடாக்களில் இருந்து எடுக்கப்பட்ட 45 நிமிட பதிவுகளை அவர்களால் கேட்க முடிந்தது.

கொல்லப்படுவதற்கு முன்பு சில வாரங்கள் மத்திய கிழக்கில் ஆட்சியாளர்களுக்கு எதிரானவர்கள் தஞ்சம் புகுந்திருந்த இஸ்தான்புல் நகரில் ஜமால் கஷோக்ஜி இருந்துள்ளார்.

59 வயதான அவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். மனைவியை விவாகரத்து செய்திருந்தார். துருக்கியைச் சேர்ந்த கல்வி ஆராய்ச்சியாளர் ஹெடிஸ் செஞ்சிஸ் உடன் சமீபத்தில் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.

அந்த பெருநகரில் இருவரும் சேர்ந்து வாழ திட்டமிட்டிருந்தனர். ஆனால், மறுமணம் செய்து கொள்வதற்கு கஷோக்ஜிக்கு விவாகரத்து ஆவணங்கள் தேவைப்பட்டன.

2018, செப்டம் 28ஆம் தேதி அவரும் செஞ்சிஸும் துருக்கிய முனிசிபல் அலுவலகத்துக்குச் சென்றிருந்தனர். ஆனால் சௌதி தூதரகத்தில் இருந்து அந்த ஆவணங்களை அவர்கள் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

செஞ்சிஸை தேநீரகத்தில் நான் சந்தித்தபோது, ”இதுதான் கடைசி வழி. அவர் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது என்பதால், நாங்கள் அதிகாரபூர்வமாகத் திருமணம் செய்து கொள்வதற்காக, அந்த ஆவணங்களைப் பெற அவர் தூதரகத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது,” என்று தெரிவித்தார்.

கஷோக்ஜி தனது சொந்த நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டவர். லண்டனில் மேஃபேர் பகுதியில் சௌதி தூதரகத்தில் அவரை 15 ஆண்டுகளுக்கு முன்பு நான் சந்தித்தேன். அப்போது அவர் சௌதி நிர்வாகத்தினருக்குப் பிடித்தமானவராக இருந்தார். தூதரிடம் மென்மையாகப் பேசக் கூடியவராக இருந்தார்.

அல்-கய்தாவின் சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல் பற்றி நாங்கள் பேசினோம். சௌதியில் அல்-கய்தாவின் தலைவர் ஒசாமா பின் லேடனை பல பத்தாண்டுகளாக கஷோக்ஜி அறிந்திருந்தார்.

மத்தியக் கிழக்கு நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகளைத் தூக்கி எறியும் அல்-கய்தாவின் நோக்கம் குறித்து ஆரம்பத்தில் கஷோக்ஜிக்கு கொஞ்சம் அனுதாபம் இருந்தது. ஆனால், அவருடைய கருத்துகள் மாறியதை அடுத்து, அந்தக் குழுவின் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார், ஜனநாயகத்துக்கான முயற்சிகளை முன்னெடுத்தார்.

2007ஆம் ஆண்டில் அரசுக்கு ஆதரவான அல்-வட்டான் என்ற செய்தித்தாள் பணிக்காக அவர் தாயகம் திரும்பினார். ஆனால் ”மூன்று ஆண்டுகளில் அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

2011ஆம் ஆண்டில், அரபு எழுச்சியை ஒட்டிய நிகழ்வுகளால் உந்தப்பட்ட கஷோக்ஜி, சௌதி ஆட்சியின் அடக்குமுறை மற்றும் சர்வாதிகாரப் போக்கு என தாம் கண்டறிந்தவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். 2017ஆம் ஆண்டில் அவர் எழுதத் தடை விதிக்கப்பட்டது. தானே நாட்டைவிட்டு வெளியேறி அமெரிக்காவுக்குச் சென்றார். அவரை விவாகரத்து செய்யும்படி அவருடைய மனைவி நிர்பந்திக்கப்பட்டார்.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு கஷோக்ஜி கட்டுரைகள் எழுதினார். அவர் மரணம் அடைவதற்கு முந்தைய ஆண்டு வரையில், கடுமையான கருத்துகளைக் கொண்ட 20 கட்டுரைகளை அவர் அந்தப் பத்திரிகைக்கு எழுதியுள்ளார்.

”மன்னராட்சியில் அவர் பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது, எச்சரிக்கை எல்லைகளை அவர் தாண்டிவிடுவார்” என்று அவருடைய நண்பர் டேவிட் இக்னாசியஸ் தெரிவித்தார்.

அவர் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் வெளிவிவகாரப் பிரிவுக்கான மூத்த கட்டுரையாளர். புலனாய்வு செய்தியாளராகவும் அவர் உள்ளார். ”தன் மனதில் பட்டதை வெளியில் சொல்லி ஜமால் தானாகவே பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

கஷோக்ஜியின் பெரும்பாலான விமர்சனங்கள் புதிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை குறிவைத்து எழுதப்பட்டவையாக இருந்தன.

எம்.பி.எஸ். என குறிப்பிடப்படும் இளவரசரை, மேற்கத்திய நாடுகளில் பலரும் புகழ்ந்தனர். அவரை சீர்திருத்தவாதியாக, நாட்டின் புதிய தொலைநோக்கு பயணத்துக்கான நவீன சிற்பியாக அவர்கள் பார்த்தனர்.

ஆனால் தாயகமான சௌதி அரேபியாவில் எதிர் கருத்தாளர்கள் மீது அவர் அடக்குமுறை நடவடிக்கைகள் எடுத்தார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், அந்த செயல்களை கஷோக்ஜி வெளிப்படுத்தினார். பட்டத்து இளவரசர் வெளியில் காட்டிக் கொள்ளும் முகமாக அது இருக்கவில்லை.

”அநேகமாக பட்டத்து இளவரசருக்கு அது கோபத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த ஜமால் கஷோக்ஜிக்கு பிரச்சனை ஏதாவது செய்ய வேண்டும் என்று தன் சகாக்களிடம் அவர் எப்போதும் கேட்டுக் கொண்டிருந்தார்,” என்று இக்னாசியஸ் கூறுகிறார். அவர் அவ்வப்போது சௌதிக்குப் பயணம் சென்று, அதன் அரசியல் நிலவரம் பற்றி எழுதக் கூடியவராக இக்னாசியஸ் இருந்தார்.

கஷோக்கி விஷயத்தில் ”ஏதாவது செய்வதற்கு” இஸ்தான்புல் நகரில் சௌதிகளுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

தூதரகத்துக்கு முதலாவது நாள் சென்றபோது, ஹெடிஸ் செஞ்சிஸ் வெளியில் இருக்க வேண்டியதாயிற்று.

கட்டடத்தில் இருந்து கஷோக்ஜி சிரித்துக் கொண்டே வெளியில் வந்தது ஹெடிஸ் செஞ்சிஸுக்கு நினைவிருக்கிறது. தன்னைப் பார்த்ததில் அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்தனர் என்றும், டீ மற்றும் காபி கொடுத்தார்கள் என்றும் அவர் கூறியதாக ஹெடிஸ் செஞ்சிஸ் தெரிவிக்கிறார்.

”பயப்பட எதுவும் இல்லை என்று அவர் கூறினார். தன் நாட்டை விட்டு வெளியேறியதால் வருத்தம் கொண்டிருந்த நிலையில், அந்த சூழ்நிலையில் இருந்தது உண்மையில் நல்ல உணர்வைத் தந்தது என்று கூறினார்,” என்றும் சென்ஜிஸ் குறிப்பிட்டார்.

சில தினங்கள் கழித்து வருமாறு கஷோக்கிக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அவர் வெளியில் சென்றதும், சௌதி அரேபியாவில் ரியாத்துக்கு தொலைபேசி அழைப்புகள் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் துருக்கி புலனாய்வுத் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

”கஷோக்ஜியை தேடப்படும் நபராக தொலைபேசி அழைப்புகளில் குறிப்பிடப்பட்டது தான் முக்கியமான விஷயம்,” என்கிறார் கல்லாமர்டு.

முதலாவது தொலைபேசி அழைப்பு இளவரசரின் தகவல் தொடர்பு அலுவலகத்தை நிர்வகித்து வந்த பலம் வாய்ந்த அதிகாரி சாவுத் அல்-குவாஹ்டானிக்கு தகவல் அளிப்பதற்காக செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

”தகவல் தொடர்பு அலுவலகத்தில் உள்ள யாரோ ஒருவர் இந்தத் திட்டத்துக்கு அதிகார ஒப்புதல் அளித்திருக்கிறார். தகவல் தொடர்பு அலுவலகம் பற்றிக் குறிப்பிடும்போது சாவுத் அல்-குவாஹ்டானியைக் குறிப்பிடுவதாகக் கருதுவதில் அர்த்தம் உள்ளது,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

”தனிப்பட்ட நபர்களுக்கு எதிரான மற்ற நடவடிக்கைகளில் அவருடைய பெயர் நேரடியாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.”

சௌதியில் எதிர் கருத்தாளர்களை சிறையில் அடைத்தது மற்றும் கொடுமைப்படுத்திய சம்பவங்களில் அல்-குவாஹ்டானிக்கு தொடர்பு இருப்பதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் உள்ளன. வாகனங்கள் ஓட்டுவதற்கு பெண்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாகவே, வாகனங்கள் ஓட்டிய பெண்கள், அரசுக்கு விஸ்வாசம் இல்லாதவர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் இவ்வாறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு உள்ளது.

இளவரசருக்காக அல்-குவாஹ்டானி ஒரு ”கருப்புப் பட்டியலை” தயாரித்து செயல்பட்டு வருவதாக தனது கட்டுரைகளில் ஜமால் கஷோக்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

”அசாதாரணமான ரகசிய நடவடிக்கைகளில் குவாஹ்டானி ஈடுபட்டு வந்தார்,” என்று அரண்மனை சகாவை பற்றி புலனாய்வு செய்து வரும் இக்னாசியஸ் கூறுகிறார். ”அது அவருடைய பணியாக மாறிவிட்டது. அந்த ஈவிரக்கமற்ற செயலை அவர் செய்து வந்தார்,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

செப்டம்பர் 28ஆம் தேதி தூதரகத்துக்கும் ரியாத்துக்கும் இடையில் குறைந்தபட்சம் நான்கு தொலைபேசி அழைப்புகளின் பதிவுகள் உள்ளன. தூதரக அதிகாரிக்கும், வெளியுறவு அமைச்சகத்தின் பாதுகாப்புப் பிரிவு தலைவருக்கும் இடையிலான உரையாடலும் அதில் அடங்கும். உயர் ரகசியமான செயல் திட்டம் என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ”தேசத்துக்கான கடமை” என்று கூறும் செயலுக்கு திட்டமிடப் பட்டுள்ளது.

”மேலிடத்தில் இருந்து வந்த, தீவிரமான, உயர் நிலையில் திட்டமிடப்பட்ட செயல் திட்டமாக இருக்கிறது என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை,” என்று கென்னடி கூறுகிறார்.

”இது ஏதோ சீரற்ற, இயல்பாக நடந்த விஷயம் கிடையாது.”

அக்டோபர் 1 மதியம், சௌதி புலனாய்வு அதிகாரிகள் மூன்று பேர் இஸ்தான்புல் நகருக்கு விமானத்தில் வந்து சேர்ந்தனர். அவர்களில் இரண்டு பேர் இளவரசரின் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் என்று தெரிந்துள்ளது.

அவர்கள் திட்டமிடலை சரி பார்ப்பதற்காக வந்தவர்கள் என்று கல்லாமர்டு நம்புகிறார். ”அவர்கள் அநேகமாக தூதரக கட்டடத்தை ஆய்வு செய்து, எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்று தீர்மானித்திருப்பார்கள்.”

போஸ்போரஸ் நீர்வழித் தடத்தை நோக்கியவாறு இஸ்தான்புல் நகரில் அமைதியான, நிழலான மேல்மாடியில் துருக்கி புலனாய்வுத் துறை முன்னாள் அதிகாரி ஒருவரை நான் சந்தித்தேன். அவர் இதில் 27 ஆண்டு கால அனுபவம் கொண்டவர்.

சௌதி அரேபியா மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்த விஷயங்களில் மெட்டின் எர்சோஸ் நிபுணராக உள்ளார். முகமது பின் சல்மான் பட்டத்து இளவசராக ஆன பிறகு, தங்களுடைய புலனாய்வுப் பணிகள் அதிக தீவிரம் அடைந்ததாக கல்லாமர்டு கூறுகிறார்.

“எதிர் கருத்தாளர்களை கடத்தும் நடவடிக்கைகள் மற்றும் நிர்பந்த நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டனர்,” என்று அவர் தெரிவித்தார்.

“தனக்கான அச்சுறுத்தலை அறிந்து, முன்னெச்சரிக்கையாக இருக்க கஷோக்ஜி தவறிவிட்டார். அதற்கான விலையை அவர் கொடுக்க வேண்டியிருந்தது.”

அக்டோபர் 2ஆம் தேதி காலை நேரத்தில், இஸ்தான்புல் விமான நிலையத்துக்கு தனியார் ஜெட் விமானம் ஒன்று வந்திறங்கியது.

அதில் ஒன்பது சௌதி நாட்டவர்கள் இருந்தனர். தடயவியல் நிபுணர் டாக்டர் சலா அல்-துபைஜி என்பவரும் அதில் இருந்தார்.

அவர்களுடைய அடையாளங்கள் மற்றும் பின்னணிகளை விசாரித்த கல்லமர்டு, அது சௌதி பணத்துக்காக கொலை செய்யும் சௌதி முகவர்கள் என்று நம்புகிறார்.

”அரசு அதிகாரிகள் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர், அரசின் பொறுப்புகளில் அவ்வாறு செய்துள்ளனர்” என்கிறார் கல்லாமர்டு.

”அவர்களில் இருவருக்கு தூதரக பாஸ்போர்ட்கள் இருந்தன.”

இதுபோன்ற குறித்த நோக்கிலான திட்டத்துக்கு சௌதி மன்னர் அல்லது பட்டத்து இளவரசரின் ஒப்புதல் தேவை என்று எர்சோஸ் தெரிவித்தார்.

தூதரகத்தில் இருந்து சிறிது நேர நடைபயணத்தில் அடைந்துவிடும் தொலைவில் உள்ள பெரிய மற்றும் பிரபலமான மோவென்பிக் ஹோட்டலில் அந்த அவர்கள் தங்கினர்.

காலை 10 மணிக்கு சற்று முன்னதாக குழு ஒன்று சௌதி தூதரகத்தில் நுழைந்ததை கண்காணிப்புக் கேமரா பதிவுகள் காட்டுகின்றன.

ஒலிநாடாக்களைக் கேட்டதில் இருந்து, இந்த நடவடிக்கையை மஹேர் அப்துல் அஜீஸ் முட்ரெப் என்பவர் தான் தலைமை ஏற்று நடத்தி இருக்கிறார் என்று கென்னடி நம்புகிறார்.

இளவரசருடன் அதிக அளவில், பயணம் செய்தவராக, வெளியில் காட்டிக் கொள்ளாமல் பின்னணியில், செல்பவராக முட்ரெப் இருக்கிறார். இளவரசரின் பாதுகாப்பு விஷயங்களில் அவருக்கு நெருக்கமானவராக உள்ளார்.

“தூதரக அதிகாரிக்கும் முட்ரெப்புக்கும் இடையிலான தொலைபேசி அழைப்புகளில், கஷோக்கி செவ்வாய்க்கிழமை வருவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று ஒரு குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்கிறார் கென்னடி.

பிறகு அக்டோபர் 2ஆம் தேதி காலையில், ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள தூதரகத்துக்கு வருமாறு கஷோக்ஜிக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அவரும் செஞ்சிஸும் தூதரகத்தை நோக்கி நடந்து சென்றபோது, உள்ளே முட்ரெப்புக்கும், தடயவியல் நிபுணர் டாக்டர் அல்-துபைஜிக்கும் இடையில் அதிர்ச்சிகரமான, கொடூரமான உரையாடல் நடந்தது.

”எப்போது, எப்படி பிரேத பரிசோதனை செய்வது என்று அவர் பேசுகிறார். அவர்கள் சிரிப்பதைக் கேட்க முடிகிறது” என்று கென்னடி தெரிவித்தார்.

”உடல் உறுப்புகளை அறுக்கும்போது பெரும்பாலும் நான் இசை கேட்பேன். சில நேரம் கையில் காபி மற்றும் சுருட்டு இருக்கும் என்று அவர் கூறுகிறார்.”

டாக்டர் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப் படுகிறது என்பதை டேப் பதிவுகள் காட்டுகின்றன என்கிறார் கென்னடி.

”முதன் முறையாக இப்போதுதான் தரையில் வைத்து நான் அறுக்க வேண்டியுள்ளது,” என்று அவர் கூறியதாக கென்னடி நினைவுபடுத்தி சொல்கிறார். ”கசாப்புக் கடைக்காரனாக இருந்தால் கூட, விலங்கை தொங்க விட்டுத்தான் அறுப்பார்கள்” என்றும் அவர் பேசியது பதிவாகியிருக்கிறது.

தூதரகத்தில் மேல் மாடியில் ஒரு அறை தயார் செய்யப்பட்டுள்ளது. தரையில் பிளாஸ்டிக் விரிப்புகள் போடப் பட்டிருந்தன. உள்ளூர் துருக்கி அலுவலர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப் பட்டிருந்தது. கஷோக்ஜி வந்தபோது அதுபற்றி அவர்கள் இவ்வாறு பேசுகின்றனர். ”உயிரைத் தியாகம் செய்யும் அந்த விலங்கு வந்துவிட்டதா” என்று அவர்கள் கேட்கிறார்கள். கஷோக்ஜியை அவர்கள் அப்படிதான் குறிப்பிட்டிருக்கிறார்கள்” என்று கென்னடி தெரிவித்தார்.

குறிப்பெடுத்த நோட்டில் இருந்து அதைப் படித்துக் காட்டிய அவருடைய குரலில் அதிர்ச்சி தெரிந்தது.

மதியம் 01:15 மணிக்கு தூதரக கட்டடத்தில் கஷோக்ஜி நுழைவதை கேமரா பதிவுகள் காட்டுகின்றன.

“நாங்கள் கை கோர்த்துக் கொண்டு உள்ளே நுழைந்தது எனக்கு நினைவிருக்கிறது. தூதரக அலுவலகத்தின் முன்னால் சென்றதும், தனது செல்போன்களை ஜமால் என்னிடம் கொடுத்துவிட்டு, “பிறகு சந்திக்கலாம் டார்லிங், எனக்காக இங்கே காத்திரு” என்று கூறினார் என்று ஹெடிஸ் செஞ்சிஸ் தெரிவித்தார்.

நுழைவாயிலில் தன்னுடைய செல்போன்களை அதிகாரிகள் வாங்கிக் கொள்வார்கள் என்பது கஷோக்ஜிக்கு தெரியும். தனது தனிப்பட்ட தகவல்களை சௌதிஅதிகாரிகள் பார்ப்பதை அவர் விரும்பவில்லை.

வரவேற்பு அலுவலர்கள் கஷோக்ஜியை சந்தித்து, அவரைக் கைது செய்ய இன்டர்போல் வாரண்ட் இருப்பதாகவும், அவர் சௌதி அரேபியா திரும்ப வேண்டும் என்றும் கூறியதாக ஒலிநாடாப் பதிவுகள் காட்டுகின்றன.

தாம் நலமாக இருப்பதாக, குடும்பத்தினருக்கும் மகனுக்கும் செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்ப அவர் மறுப்பதும் பதிவாகியுள்ளது. அதன் பிறகு ஜமால் கஷோக்ஜியின் குரல் மௌனிக்கிறது.

”துணிச்சல் மிக்கவரான கஷோக்ஜி, பயம் கொண்டு, பதற்றம் அதிகரித்து, கொடூரம் அதிகரித்த நிலைக்கு மாறும் தருணத்தை பதிவுகள் மூலம் உணர முடிகிறது. உயிரைப் பறிக்கும் ஏதோ நடக்கப் போகிறது என்ற உணர்வு தெரிகிறது,” என்கிறார் கென்னடி.

”குரலின் தொனி மாறியதில் ஏதோ கொடூரம் தெரிகிறது. ஒலிநாடாக்களைக் கேட்கும்போது அதன் கொடூரம் தெரிகிறது,” என்று செஞ்சிஸ் குறிப்பிட்டார்.

சௌதியின் திட்டங்களைகஷோக்ஜி எந்த அளவுக்கு அறிந்திருந்தார் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை என்று கல்லாமர்டு குறிப்பிடுகிறார். ”தாம் கொல்லப்படுவோம் என்று கஷோக்ஜி நினைத்தாரா என்று தெரியவில்லை. ஆனால் தம்மை அவர்கள் கடத்துவார்கள் என்று நிச்சயமாக நினைத்திருக்கிறார். ”எனக்கு ஏதும் ஊசி போடப் போகிறீர்களா?” என்று கஷோக்ஜி கேட்பதும், ”ஆமாம்” என்று அவர்கள் சொல்வதும் பதிவாகியுள்ளது.

தம்மை கடத்துகிறீர்களா என்று கஷோக்ஜி இரண்டு முறை கேட்பதை பதிவுகள் மூலம் அறிய முடிகிறது. ” ஒரு தூதரகத்தில் எப்படி இது நடக்கலாம்” என்றும் கஷோக்கி கேட்பதாக அதன் மூலம் தெரிய வருகிறது.

”அதன் பிறகு கேட்கும் சத்தங்களைக் கேட்டால், அவர் மூச்சுத் திணறலுக்கு ஆளாக்கப்படுவதை அறிய முடிகிறது. அநேகமாக அவருடைய தலையில் பிளாஸ்டிக் உறை போட்டு மூச்சுத் திணறடிக்கப் படுவதாகத் தெரிகிறது,” என்கிறார் கல்லாமர்டு. “அவருடைய வாய் கட்டாயமாக மூடப்படுகிறது அநேகமாக கைகளாலோ அல்லது வேறு ஏதோ பொருளாலோ அவ்வாறு செய்யப்படுகிறது.”

இந்த நடவடிக்கைக் குழு தலைவரின் உத்தரவின்படி, அதற்குப் பிறகு தடயவியல் நிபுணர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வது போல தெரிகிறது என்று கென்னடி நம்புகிறார்.

”ஒரு குரல் `அவர் அறுக்கட்டும்’ என்று கூறுவதை கேட்க முடிகிறது. அது முட்ரெப் குரல் போல தெரிகிறது.;;

”அப்போது ஒருவர் ‘விஷயம் முடிந்துவிட்டது’ என்று கத்துவது கேட்கிறது. ‘அதை எடுங்கள், அதை எடுங்கள். இதை அவருடைய தலையில் போட்டு மூடுங்கள்’ என்று வேறு யாரோ கூச்சல் போடுகிறார். அவருடைய தலையைத் துண்டித்துவிட்டார்கள் என்று தான் நான் அனுமானிக்க வேண்டியுள்ளது.”

தூதரகத்துக்கு வெளியே தன்னை விட்டுவிட்டு கஷோக்ஜிகி சென்று அரை மணி நேரம்தான் ஆகியிருந்தது செஞ்சிஸுக்கு.

“அந்த சமயத்தில், எனது எதிர்காலம் பற்றிய கனவில் இருந்தேன். எங்கள் திருமணம் எப்படி இருக்கும் என்ற கனவில் இருந்தேன். ஒரு சிறிய நிகழ்ச்சியாக நடத்த நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம்,” என்றார் அவர்.

மதியம் சுமார் 03:00 மணிக்கு தூதரக வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு, இரண்டு தெருக்கள் தள்ளியிருக்கும் தூதரக அதிகாரி வீட்டுக்குச் சென்றதை கண்காணிப்புக் கேமரா பதிவுகள் காட்டுகின்றன.

மூன்று ஆண்கள் சூட்கேஸ்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளுடன் உள்ளே செல்கிறார்கள். உடலின் துண்டிக்கப்பட்ட பாகங்களாக அவை இருக்கலாம் என்று கல்லாமர்டு நம்புகிறார்.

பிறகு ஒரு கார் வெளியே செல்கிறது. கஷோக்ஜியின் உடல் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவே இல்லை.

அந்தக் கொலையின்போது தெரிவிக்கப்பட்ட, மனதை உலுக்கும் தகவல் ஒன்று இருந்தது. உடலை சிதைப்பதற்கு எலும்பை அறுக்கும் ரம்பம் பயன்படுத்தப்பட்டதா என்பதே அது.

உடலை அறுக்கும் சப்தம் போன்ற எதையும் ஒலிப்பதிவில் கேட்க முடியவில்லை என்று கென்னடி தெரிவித்தார். அவருக்கு அந்த சப்தம் பழக்கப்பட்டதால், அந்த சப்தம் இந்தப் பதிவில் இல்லை என்கிறார். ஆனால், குறைந்த அளவிலான சப்தம் ஒன்று கேட்டதாக அவர் சொல்கிறார். அது ரம்பத்தின் சத்தமாக இருக்கும் என்று துருக்கி புலனாய்வு அதிகாரிகள் நம்புகின்றனர்.

15:53 மணிக்கு கொலைப் படையின் இரண்டு உறுப்பினர்கள் தூதரகத்தை விட்டு வெளியேறுவதை கேமரா பதிவுகள் காட்டுகின்றன.

அவர்கள் தெருவில் கேமராக்களைக் கடந்து தூதரகத்துக்கும், பழைய இஸ்தான்புல்லின் மையப் பகுதிக்கும் இடையில் எங்கு சென்றார்கள் என்று நான் ஆய்வு செய்தேன்.

கஷோக்ஜியின் உடைகளை ஒரு ஆண் அணிந்திருந்தார். ஆனால் வேறு ஷூக்கள் அணிந்திருந்தார். இன்னொரு ஆண், முகத்தை மூடும் வகையில் சட்டை அணிந்திருந்தார். கையில் வெள்ளை பிளாஸ்டிக் பை ஒன்று வைத்திருந்தார்.

இஸ்தான்புல் நகரின் புகழ்பெற்ற புளூ மசூதி நோக்கி அவர்கள் சென்றார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது, கஷோக்ஜியின் உடைகளை முன்பு அணிந்திருந்தவரின் துணிகள் மாறியிருந்தன.

ஒரு டாக்சி பிடித்து ஹோட்டலுக்குச் சென்றனர். கஷோக்ஜியின் துணிகள் அடங்கியதாகக் கருதப்படும் பிளாஸ்டிக் பையை அருகில் இருந்த ஒரு குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, சுரங்கப் பாதைக்குச் சென்று மோவென்பிக் ஹோட்டலுக்குச் சென்றனர்.

படத்தின் காப்புரிமைREUTERS
”கஷோக்ஜிக்கு கேடு எதுவும் நடக்கவில்லை என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குவதற்காக, மிக கவனமாக திட்டமிட்டு செய்திருக்கிறார்கள்” என்கிறார் கல்லாமர்டு.

இவ்வளவு நேரமும் சென்ஜிஸ் இன்னும் தூதரகத்துக்கு வெளியிலேயே காத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

”நான் 15:30 மணிக்குப் பிறகும் காத்திருந்தேன். தூதரக அலுவலகத்தை மூடிவிட்டார்கள் என்பதை அறிந்த போது, அங்கு ஓடினேன். ஜமால் ஏன் வெளியில் வரவில்லை என்று நான் கேட்டேன். நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என புரியவில்லை என்று அங்கிருந்த ஒரு பாதுகாவலர் கூறினார்.”

மாலை 04:41 மணிக்கு ஹெடிஸ் செஞ்சிஸ் நம்பிக்கை இழந்த நிலையில், கஷோக்ஜியின் பழைய நண்பர் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஏதாவது பிரச்சனை இருந்தால் தன்னை அழைக்குமாறு அவர் தன்னுடைய எண்ணைக் கொடுத்திருந்தார்.

உயர்நிலையில் தொடர்புகள் கொண்ட டாக்டர் யாசின் அக்டய் என்ற அவர் துருக்கியில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்.

“எனக்கு தெரியாத ஒரு எண்ணில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. உண்மையிலேயே பதற்றத்தில் இருந்த, எனக்கு அறிமுகம் இல்லாத ஒரு பெண்மணி பேசினார்” என்று அவர் கூறினார். “என்னைத் திருமணம் செய்யவிருந்த ஜமால் கஷோக்ஜி சௌதி தூதரகத்துக்குள் சென்றார். ஆனால் வெளியே வரவில்லை என்று கூறினார்.”

யாசின் விரைந்து செயல்பட்டு துருக்கி புலனாய்வுத் துறை தலைவருடன் பேசிவிட்டு, அதிபர் ரிசெப் தய்யீப் எர்துவான் அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தார்.

கொலைப் படையாக வந்தவர்கள் மாலை 06:30 மணிக்கு தனியார் ஜெட் விமானத்தில் ரியாத்துக்கு புறப்பட்டனர், வந்து 24 மணி நேரத்துக்குள் அவர்கள் புறப்பட்டனர்.

தூதரகத்துக்குள் என்ன நடந்தது என்பது பற்றி மறுநாள் சௌதி மற்றும் துருக்கி அரசுகள் முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டன. கஷோக்ஜி தூதரகத்தை விட்டு வெளியில் சென்றுவிட்டார் என சௌதி அரேபியா உறுதியாகக் கூறியது. கஷோக்ஜி இன்னும் உள்ளே தான் இருக்கிறார் என்று துருக்கி கூறியது.

அதற்குள் துருக்கி புலனாய்வுத் துறையினர், தூதரகத்தில் பதிவான ஒலிநாடாக்களை, கஷோக்ஜி மாயமானதற்கு நான்கு நாட்கள் முன்பு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகள் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்யத் தொடங்கிவிட்டனர்.

படத்தின் காப்புரிமைGETTY IMAGES
எனவே அவருடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று அவர்களுக்கு அந்த நேரத்தில் தெரிந்திருக்கிறது. அப்படியானால், அவரை ஏன் அவர்கள் எச்சரிக்கவில்லை?

“அவர்களுக்குத் தெரியும் என்று நான் நினைக்கவில்லை. தூதரகத்தில் என்ன நடக்கிறது என்று நேரடியாக அவர்கள் கண்காணிக்கிறார்களா என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை” என்கிறார் கல்லாமர்டு.

“இதுபோன்ற உளவறிதல்கள் வழக்கமாகவே நடக்கும். ஒலிநாடாக்களை அவர்கள் கேட்பது, குறிப்பிட்ட நிகழ்வாக அமைந்தது. கஷோக்ஜி கொல்லப்பட்டு, காணாமல் போனதால்தான் அவர்கள் கஷோக்ஜி ஆய்வு செய்திருக்கிறார்கள்.”

தன்னுடைய முன்னாள் புலனாய்வு சகாக்கள் முந்தைய காலத்து கஷோக்ஜி ஆய்வு செய்து 4,000 முதல் 5,000 மணி நேரம் வரையிலான பதிவுகளைக் கேட்டு, முக்கியமான நாட்களைக் கண்டறிந்து, 45 நிமிட பதிவுகளை கல்லாமர்டு மற்றும் கென்னடிக்கு அளித்துள்ளனர் என்று எர்சோஸ் தெரிவித்தார்.

கஷோக்ஜி கொல்லப்பட்ட நான்கு நாட்கள் கழித்து, வேறொரு சௌதி குழு துருக்கி வந்தது. என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வந்ததாக அவர்கள் கூறினர்.

உண்மையில் அது மூடி மறைப்பதற்கான குழு என்று கல்லாமர்டு நம்புகிறார். தூரதக வளாகம் சர்வதேச சட்டத்தின்படி சௌதியின் எல்லையாகக் கருதப்படும். இரண்டு வாரங்களுக்கு துருக்கி புலனாய்வு அதிகாரிகள் உள்ளே நுழைய சௌதி அரசு அனுமதிக்காது.

”அவர்கள் சில ஆதாரங்களைத் திரட்டுவதற்குள், அங்கே எதுவும் இருக்காது. திரு. கஷோக்கியின் டி.என்.ஏ. ஆதாரம் கூட அங்கே இருக்காது,” என்கிறார் கல்லாமர்டு.

”அந்தப் பகுதி தடயவியல் ரீதியாக முழுக்க சுத்தம் செய்யப்பட்டிருக்கும் என்பதுதான் தர்க்கரீதியிலான முடிவாக இருக்கிறது.”

சௌதி தூதரகத்திற்கு கஷோக்கி கொல்லப்பட்டுள்ளார் என்று, அன்று மாலையில் துருக்கி அதிகாரிகள் ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

“ஜமாலுக்கு இப்படி நடந்திருக்கக் கூடாது. அவர் நல்ல முறையில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்” என்கிறார் ஹெடிஸ் செஞ்சிஸ். “அவரை அவர்கள் கொலை செய்தது, என்னுடைய வாழ்வின் நம்பிக்கையையும் கொன்றுவிட்டது” என்றார் அவர்.

இஸ்தான்புல் நகரில், தூதரக அலுவலகம் என்ற அணுக முடியாத அதிகார எல்லைக்குள், கொலை நடந்திருப்பது துருக்கிய அதிகாரிகளை குழப்ப நிலைக்கு ஆளாக்கிவிட்டது.

துருக்கி தரப்பில் தீவிர அழுத்தம் தரப்பட்ட போதிலும், சில வாரங்களுக்கு கொலையை சௌதி ஒப்புக்கொள்ளவில்லை. தூதரகத்தில் ”கை கலப்பு” இருந்தது என்று முதலில் கூறியது. பிறகு அது ஒரு ”முரட்டுத்தனமான நடவடிக்கை” என்று கூறியது.

தங்களுக்குத் தெரிந்த விஷயங்களில் சிலவற்றை உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களுக்குக் கசிய விடுவது என்பது துருக்கி அதிகாரிகளின் அணுகுமுறையாக இருந்தது. சௌதி அரசு அலுவலர்களால் கஷோக்ஜி கொல்லப்பட்டார் என்பதை நிரூபிக்கும் வகையிலான ஒலிநாடாக்களைக் கேட்பதற்கு, எம்.ஐ. 6 உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில புலனாய்வு அமைப்புகள் மற்றும் சி.ஐ.ஏ. பிரதிநிதிகளுக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

இந்தக் கொலைக்கு முகமது பில் சல்மான் உத்தரவிட்டிருப்பதற்கான நிச்சயமான வாய்ப்பு உள்ளது என்ற முடிவுக்கு சி.ஐ.ஏ. வந்ததாகச் சொல்லப்படுகிறது. நாடாளுமன்றக் குழுவிடம் அவர்கள் தகவல் தெரிவித்தனர். கண்டறியப்பட்ட விஷயத்தில் அவர்களுக்கு எந்த சந்தேகமும் வராத அளவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜனவரியில், கஷோக்ஜி கொலை தொடர்பாக ரியாத்தில் 11 பேர் மீது சௌதி அரசு கடைசியாக விசாரணை நடத்தியது. அதில் முட்ரெப், டாக்டர் அல்-துபைகி உள்ளிட்டோர் இருந்தனர். ஆனால் இதன் முக்கிய மூளையாக செயல்பட்ட சாவுத் அல்-குவாஹ்டானி அதில் இடம் பெறவில்லை.

படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அவர் மீது குற்றஞ்சாட்டப்படவோ அல்லது சாட்சியம் அளிக்க நீதிமன்றத்துக்கு வருவதற்கு சம்மன் அளிக்கப்படவோ இல்லை. அவருடைய குடும்பத்தினர் உள்பட, எல்லோரிடம் இருந்தும் அவர் பிரித்து வைக்கப் பட்டிருப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போதும் அவர் இளவரசருடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு கல்லமர்டு அனுப்பிய அறிக்கை உறுதியான முடிவுக்கு வந்துள்ளது.

“சர்வதேச சட்டத்தின் கீழ் இந்தக் குற்றச்செயலை அரசுக் கொலையாக அல்லாமல் வேறு எந்தப் பிரிவிலும் சேர்ப்பதற்கும் எந்த அறிகுறியும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

கஷோக்ஜி கொலை தொடர்பான டேப்கள் மூலம் தெரிய வந்த விஷயங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கென்னடி கூறுகிறார்.

“அந்தத் தூதரகத்தில் துரோகம் இழைக்கும் கொடூரமான சம்பவம் நடந்திருக்கிறது. உயர்நிலை நீதி விசாரணைக்கு வலியுறுத்த வேண்டிய பொறுப்பு சர்வதேச சமூகத்துக்கு உள்ளது” என்கிறார் அவர்.

இந்தக் கொலையில் தொடர்புள்ளவர்களை நாடு கடத்தி, விசாரணையை எதிர்கொள்ள அனுப்பி வைக்க வேண்டும் என்று துருக்கி வலியுறுத்தியுள்ளது. ஆனால் இதற்கு சௌதி அரேபியா மறுத்துவிட்டது.

பனோரமாவுக்கு நேர்காணல் அளிக்க சௌதி அரசு மறுத்துவிட்டது. ஆனால் ”வெறுக்கத்தக்க கொலை” சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், அதற்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

”கொடூரமான குற்றம்” என குறிப்பிடும் இந்தச் சம்பவத்தில் இளவரசருக்கு ”எந்தத் தொடர்பும் இல்லை” என்றும் சௌதி அரசு கூறியுள்ளது.

ஓராண்டு முடிந்துவிட்டது. தேநீரகத்தில் இருந்து வெளியே வந்தபோது, தன்னை மணக்கவிருந்தவரின் வாழ்க்கை கொடூரமாக முடிக்கப்பட்டதால் துன்பத்தில் இருக்கும் பெண்ணிடம் அதன் வலியை என்னால் இப்போதும் காண முடிந்தது.

ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டதில் உண்மையான காரணம் குறித்து ஹெடிஸ் செஞ்சிஸ், நான் புறப்படும்போது எச்சரிக்கை விடுத்தார்.

“அது எனக்கான துயரம் மட்டுமல்ல. மனித சமுதாயத்திற்கு, ஜமால் போல சிந்திக்கும், அவரைப் போன்ற நிலைப்பாடு எடுக்கும் அனைவருக்குமான துயரம்” என்றார் அவர்.